நாங்குநேரி பெரியகுளம் மடை சீரமைப்பு பணிகள் மெத்தனம்: விரைந்து முடிக்க விவசாயிகள் வலியுறுத்தல்

நாங்குநேரி: நாங்குநேரியில் பெரியகுளம் மடை சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.நாங்குநேரியில் உள்ள பெரியகுளம் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பாசன பரப்பு கொண்டதாகும். நெல்லை மாவட்டத்தில் உள்ள பெரியகுளங்களில் ஒன்றான  இந்த குளத்தில் மடைகள் பழுதடைந்திருந்தன. விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தியதையடுத்து பொதுப்பணித்துறை சார்பில் சுமார் 65 லட்ச ரூபாய்  செலவில் மடைகளை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. கருட மடை, பெரிய மடை ஆகியன பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டப்பட்டு  அங்கிருந்த பழைய கட்டிடங்கள் அகற்றப்பட்டு உள்ளன.

இதற்காக சுமார் 25 அடி உயரம் கொண்ட குளத்தின் கரையில் உள்ள மண் அகற்றப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு மாதங்களுக்குள் பருவமழை துவங்க  உள்ளது. மழை மூலம் கிடைக்கும் தண்ணீரை கொண்டு விவசாய பணிகளை மேற்கொள்ள முடியும் என்பதால் அதற்குள் மடைகள் சீரமைப்பு  பணிகளை முடிக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் குளத்தில் தண்ணீர் இருப்பு வைக்க முடியாத நிலை ஏற்படும். இதனால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழக்கும் சூழ்நிலை உருவாகிவிடும் என விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.எனவே நாங்குநேரி பெரியகுளத்தில் நடந்து வரும் மடை சீரமைப்பு பணிகளை விரைவாக நடத்தி முடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க  வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories: