கீழக்கரை அருகே மழைநீரில் தத்தளித்து செல்லும் மக்கள்: பாலம் அமைத்து தரப்படுமா?

கீழக்கரை: கீழக்கரை அருகே ஊருக்கு செல்லும் ஒரு பாதையிலும் மழைநீர் சூழ்ந்து விடுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கீழக்கரை அருகேயுள்ளது பெரியபட்டினம் குருத்தமண்குண்டு கிராமம். இங்கு 60க்கும் மேற்பட்ட மீனவகுடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் பெரியபட்டினம் செல்வதற்கும், மீன்படிக்க தெற்கு புதுக்குடியிருப்பு கடற்கரை செல்வதற்கும்,  மாணவ- மாணவிகள் பள்ளி, கல்லூரிக்கு செல்வதற்கும் இங்குள்ள பிரதான பாதையையே பயன்படுத்தி வருகின்றனர். மழைக்காலங்களில்  இப்பாதையில் தண்ணீர் சூழ்ந்து விடுகிறது. இதனால் இவ்வழியே செல்லும் அனைத்து தரப்பினரும் கடும்அவதிக்குள்ளாகினர். இவ்வழியே பாலம் அமைத்து தந்தால் எளிதாகசெல்லலாம் என்கின்றனர் இப்பகுதி மக்கள்.

இதுகுறித்து திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பைரோஸ்கான் கூறுகையில், ‘பெரியபட்டினம் தெற்கு புதுக்குடியிருப்பில் இருந்து  குருத்தமண்குண்டு செல்லும் வழியில் மழைக்காலங்களில் சுமார் 4 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி நின்று விடுகிறது. இதனால் மருத்துவம்  உள்ளிட்ட அவசர காலங்களிலும், மீன்பிடிக்க செல்லும் தொழிலாளர்களும் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் மழைக்காலத்தில் பள்ளிக்கு  செல்லும் மாணவ- மாணவிகளை பெற்றோர்கள் தோளில் சுமந்து சென்று அப்பகுதியை கடக்கும் அவலநிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட  அதிகாரிகளிடம் பலமுறை கூறினோர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உடனே இப்பாதையில்  அமைந்துள்ள தனியார் நிலத்தை அரசுடைமையாக்கி, அதில் பாலம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: