வாலாஜாபாத் பேரூராட்சியில் பன்றிகளால் சுகாதார சீர்கேடு: தொற்றுநோய் பரவும் அபாயம்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் பேரூராட்சியில் சுற்றி திரியும் பன்றிகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. வாலாஜாபாத் பேரூராட்சியின் 15 வார்டுகளில் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். வாலாஜாபாத் நகரில் 100க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் செயல்படுகின்றன. இந்நிலையில் வாலாஜாபாத் பேரூராட்சியின் 15 வார்டுகளிலும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் பன்றிகள் அதிகரித்துள்ளன. இந்த பன்றிகள் வீடுகளின் முன்பு உள்ள கால்வாய்களில் விளையாடுவதும், வீட்டின் வெளிப்புறத்தில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளை தள்ளி அசுத்தம் செய்வது, அரசு அலுவலகங்களில் இரவு நேரங்களில் தஞ்சம் அடைவது என பல்வேறு சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்துகின்றன. இதுகுறித்து பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், பொதுமக்களுக்கு பல்வேறு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம், அரசு அலுவலகங்கள், சாலைகளில் சுற்றித்திரியும் பன்றிகளை அப்புறப்படுத்த, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: