பெங்களூருவில் பிடிபட்ட போதை பொருள் கடத்தல் கும்பலுடன் மா.கம்யூ செயலாளர் மகனுக்கு தொடர்பு: கேரளாவில் முஸ்லிம் லீக் பரபரப்பு குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்: பெங்களூருவில் பிடிபட்ட போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த முகமது அனூபுக்கும், கேரள மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கோடியேறி பாலகிருஷ்ணன் மகனுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக முஸ்லிம் லீக் குற்றம் சாட்டியுள்ளது. மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கடந்த 29ம் தேதி பெங்களூருவில் நடத்திய அதிரடி சோதனையில் கன்னட டிவி நடிகை அனிகா, கேரள மாநிலம், கொச்சியை சேர்ந்த முகமது அனூப் (39), பாலக்காட்டை சேர்ந்த ரவீந்திரன்(37) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், முகமது அனூபுக்கும், திருவனந்தபுரம் தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ரமீஸுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதுதவிர கேரள முக்கிய அரசியல் பிரமுகரின் நெருங்கிய உறவினருடனும் முகமது அனூபுக்கு தொடர்பு இருந்துள்ளது. முகமது அனூப் முதலில் கொச்சியில் வியாபாரம் செய்து வந்தார். இதில் நஷ்டம் ஏற்பட்டதால் பாலக்காட்டை சேர்ந்த ரவீந்திரனுடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரு சென்றார். அங்கிருந்து இருவருக்கும் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு பெங்களூருவில் தொடர்புகளை ஏற்படுத்த கேரளாவை சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகரின் உறவினர் உதவியுள்ளார். அது யார் என்ற பரபரப்பு நிலவி வந்தது.

இந்நிலையில், முஸ்லிம் லீக் இளைஞர் பிரிவு கேரள மாநில பொதுச் செயலாளர் பிரோஸ் நேற்று கூறுகையில் ‘‘போதைப்பொருள் கடத்தல் கும்பலின் முக்கிய நபரான முகமது அனுாபுடன், கேரள மாநில மார்க்சிஸ்ட் செயலாளர் கோடியேரி பாலகிருஷ்ணனின் மகன் பினீஷ் கோடியேறிக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. முகமது அனூப் கடந்த ஜூலை 10ம் தேதி பினீஷ் கோடியேறியுடன் பலமுறை பேசியுள்ளார். அன்றுதான் சொப்னா பெங்களூருவில் பிடிபட்டார். இதுபோல் தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ரமீஸுடனும் முகமது அனூபுக்கு தொடர்பு உண்டு. எனவே, இது பற்றி அவரிடம் போலீஸ் விசாரிக்க வேண்டும்,’’ என்றார். இந்த குற்றச்சாட்டு பற்றி பினீஷ் கோடியேறி கூறுகையில், ‘‘எனக்கும், முகமது அனூபுக்கும் தொடர்பு இருப்பது உண்மைதான். கோழிக்கோட்டில் ஹோட்டல் உட்பட பல தொழில்கள் நடத்துவதற்கு நான் அவருக்கு ரூ.6 லட்சம் கடன் கொடுத்துள்ளேன். அதை தவிர வேறு எதுவும் எனக்கு தெரியாது,’’ என்றார்.

* மலையாள நடிகர்களுடன் தொடர்பு

முகமது அனூப் கன்னட சினிமாத் துறையினருக்கு மட்டுமின்றி, மலையாள சினிமாவை சேர்ந்தவர்களுக்கும் ஏராளமான அளவில் போதை பொருள் சப்ளை செய்து வந்துள்ளார். இவர் பெங்களூருவில் ஒரு ஓட்டல் நடத்தி வருகிறார். இந்த ஓட்டல் திறப்பு விழாவுக்கு மலையாள சினிமாவை சேர்ந்த நடிகர்கள் வாழ்த்து வீடியோ வெளியிட்டுள்ளனர். இதனால், இவருடன் நெருக்கமாக இருந்த நடிகர்களிடம் போதை பொருள் தடுப்பு பிரிவு விசாரணை நடத்த உள்ளது.

* மும்பையில் ஒருவர் கைது

தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு  அதிகாரிகள் மும்பையில் பதுங்கியிருந்த போதை பொருள் டீலர் பயூத் அகமது என்பவரை நேற்று கைது செய்தனர். கோவாவை சேர்ந்த இவர் மும்பை, டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக அவரிடம் இருந்து ரூ.1.70 கோடி மதிப்பிலான ஹைட்ரோ கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் கன்னட திரையுலகை சேர்ந்த சில நடிகர், நடிகைகள், இயக்குனர்களுக்கு போதை பொருள் சப்ளை செய்திருப்பதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இது தொடர்பாக 3வது பக்கம் என்ற பெயரில் யார் யாருக்கு போதை பொருள் வழங்கப்பட்டுள்ளது என்பதை குறித்து வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Stories: