நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கேள்வி நேரம் கிடையாதா? எதிர்க்கட்சிகள் அதிருப்தி

புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், கடந்த மார்ச் மாதத்துக்கு பிறகு நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற உள்ளது. இதில், மாநிலங்களவையும், மக்களவையும் தனித்தனியாக காலையும், மாலையும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் சமூக இடைவெளியுடன் அமருவதற்கு ஏற்ற வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், செப்டம்பர் 14ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கேள்வி நேரம் இடம் பெறாது என மாநிலங்களவை செயலகம் அறிவித்துள்ளது.

இதனால், எதிர்க்கட்சிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளன. எனினும், பூஜ்ய நேரம் மற்றும் இதர நடைமுறைகள் தொடரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கூட்டத் தொடரில் பங்கு பெறும் உறுப்பினர்கள், 72 மணி நேரத்திற்குள் கொரோனா நோய் பரிசோதனை செய்ய வேண்டும் என்பது உட்பட கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் கடைப்பிடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. வார விடுமுறை ஏதுமின்றி தினந்தோறும் தொடர்ந்து கூட்டத்தொடர் நடைபெறும்.

* காலை, மாலை

செப்டம்பர் 14ம் தேதி தொடங்கும் கூட்டத் தொடரில், காலை 9 மணி முதல் ஒரு மணி வரை மக்களவையும், 3 மணி முதல் 7 மணி வரை மாநிலங்களவையும் நடைபெறும். 14ம் தேதிக்கு பிறகு மாநிலங்களவை காலை 9 மணி முதல் 1 மணி வரையும், மக்களவை 3 மணி முதல் 7 மணி வரையும் நடைபெறும்.

Related Stories: