ஜி.எஸ்.டி இழப்பை எதிர்கொள்ள மத்திய அரசு அளித்த இரட்டை விருப்பங்களை நிராகரித்த தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பாராட்டுக்கள் : ப.சிதம்பரம்!!

சென்னை : ஜி.எஸ்.டி இழப்பை எதிர்கொள்ள மத்திய அரசு வழங்கிய இரண்டு விருப்பங்களையும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் நிராகரித்திருப்பதை முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வரவேற்றுள்ளார்.

மத்திய அரசின் இரண்டு வாய்ப்புகள்: கடந்த 27ம் தேதி நடந்த ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் மத்திய அரசின் சாா்பில் மாநிலங்களுக்கு இரண்டு வாய்ப்புகள் அளிக்கப்பட்டன. முதல் திட்டத்தின் படி ரூ.97,000 கோடி வரை மாநிலங்கள் கடன் பெற்றுக் கொள்ளலாம். இரண்டாவது திட்டத்தின் படி, மாநிலங்கள் சந்திக்கவுள்ள ஜிஎஸ்டி வருவாய் பற்றாக்குறையான ரூ.2.35 லட்சம் கோடியையும் ஒட்டுமொத்தமாக மாநில அரசுகள் கடனாகப் பெற்றுக் கொள்ளலாம். இது மாநில அரசுகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவுகளில், “ஜி.எஸ்.டி இழப்பீடு இடைவெளியைக் குறைக்க மத்திய அரசு அளித்த போலியான இரட்டை விருப்பங்களை நிராகரித்த பஞ்சாப், சட்டீஸ்கர், கேரளா, மேற்கு வங்கம், தெலங்கானா மற்றும் டெல்லி மாநிலங்களுக்கு பாராட்டுக்கள். எனக்குத் தெரிந்த வரை ராஜஸ்தான் மற்றும் புதுச்சேரி மாநிலங்களும் கூட இந்த இரண்டு விருப்பங்களை நிராகரித்துள்ளன.

இந்த இரண்டு விருப்பங்களையும் தமிழ்நாடு ஏற்க மறுத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வருவாய் பற்றாக்குறையை மாநிலங்களுக்கு ஈடு செய்யும் மத்திய அரசின் தார்மீக பொறுப்பிலிருந்து மத்திய அரசு விலகுவதை மாநிலங்கள் அனுமதிக்கக் கூடாது. கூடுதல் கடன் வாங்குவதால் ஏற்படும் நிதிச் சுமையை மத்திய அரசு ஏற்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Related Stories: