நாட்டின் ஜிடிபி 23.9% சரிந்திருப்பது மோடி அரசுக்கான அவமானம்.. தவறுகளை ஒப்புக் கொள்ளவும் மாட்டார்கள் : ப.சிதம்பரம் தாக்கு!!

டெல்லி : நாட்டின் ஜிடிபி 23.9% சரிந்திருப்பது என்பது மத்தியில் ஆளும் பிரதமர் மோடி அரசுக்கான அவமானம்; இந்த அரசு தமது தவறுகளை ஒருபோதும் ஒப்புக் கொள்ளாது என்று முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் சாடியுள்ளார்.மேலும் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2020-2021ம் ஆண்டின் முதல் காலாண்டில் 23.9% ஆக சரிந்திருப்பது மத்திய அரசு திறனற்ற செயல்படுவதையே காட்டுவதாக முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் - ஜூன் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 23.9%ஆக வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், கொரோனா பெருந்தொற்றை கையாள்வதில் மத்திய அரசு திறனற்று இருப்பதன் விளைவாகத்தான் உள்நாட்டு உற்பத்தி பாதாளத்திற்கு சென்றுள்ளதாக குற்றம் சாட்டி இருக்கிறார்.

இது தொடர்பாக தாம் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள பொருளாதார நிபுணர்களின் எச்சரிக்கையை மத்திய அரசு ஏற்று கொள்ளவில்லை என்று கூறியுள்ளார். பொருளாதார பின்னடைவு குறித்து சில நாட்களுக்கு முன்பு இந்திய ரிசர்வ் வங்கி தனது ஆண்டு அறிக்கையில் முன்னறிவித்து இருந்ததையும் சிதம்பரம் சுட்டிக் காட்டி இருக்கிறார். இந்திய பொருளாதார மொத்த உற்பத்தி வளர்ச்சி ஆழமான பாதாளத்திற்கு செல்லும் என்பதை பிரதமர் மற்றும் நிதியமைச்சரை தவிர அனைவரும் அறிந்திருந்தார்கள் என்றும் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.

Related Stories: