நெல்லூர் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு 14ம் தேதி தண்ணீர் திறக்கப்படும்: முதன்மை பொறியாளர் தகவல்

திருமலை: நெல்லூர் கண்டலேறு அணையிலிருந்து சென்னை பூண்டி ஏரிக்கு வரும் 14ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என முதன்மை பொறியாளர் தெரிவித்துள்ளார். சென்னை மக்களின் குடிநீர் தாகத்தை தீர்க்க தமிழக அரசு 1983ம் ஆண்டு ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தை தொடங்கியது. தெலுங்கு கங்கை எனும் இத்திட்டத்தின் மூலம் ஆந்திர அரசு ஆண்டுக்கு 12 டிஎம்சி தண்ணீர் வழங்க ஒப்பந்தம் செய்தது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி, ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி தண்ணீரை நெல்லூர் மாவட்டம், கண்டலேறு அணையிலிருந்து சென்னை பூண்டி ஏரிக்கு திறந்துவிட வேண்டும். கடந்தாண்டு கண்டலேறு அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் ஜூலை மாதத்திற்கான தண்ணீர் வழங்க முடியவில்லை.

பின்னர், செப்டம்பர் 25ம் தேதி முதல் கடந்த ஜூன் 24ம் தேதி வரை தொடர்ந்து 8.40 டிஎம்சி தண்ணீர் வழங்கியது. இதனால், அணையில் நீர் இருப்பு குறைந்ததால் தண்ணீர் வழங்குவதை ஆந்திர அரசு நிறுத்தியது. இதனால், பூண்டி ஏரியில் தண்ணீர் இருப்பு குறைந்து வருகிறது. இதையடுத்து, தமிழக அதிகாரிகள் ஆந்திர அதிகாரிகளுக்கு 2 முறை கடிதம் எழுதி மீண்டும் தண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கிடையே, திருப்பதி தெலுங்கு கங்கை திட்ட அலுவலகத்தில் தமிழக அதிகாரிகள் மற்றும் ஆந்திரா அதிகாரிகளுடன் முதன்மை பொறியாளர் ஹரிநாத் தலைமையில் நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது, அவர் பேசுகையில், ‘‘கண்டலேறு அணையில் 30 டிஎம்சி தண்ணீர் வரத்து வந்த பிறகு வரும் 14ம் தேதி முதல் சென்னை பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்படும். கண்டலேறு அணையில் தற்போது 23 டிஎம்சி தண்ணீர் இருப்புள்ளது’’ என்றார்.

Related Stories: