கொரோனா பாதித்த நபருக்கு மீண்டும் தொற்று ஏற்பட வாய்ப்பில்லை: விஞ்ஞானிகள் தகவல்

வாஷிங்டன்: கொரோனா பாதித்த நபருக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டதாக செய்தி வெளியான நிலையில் அது கடந்த கால தொற்றின் இறந்த வைரஸ்களால் வரும் முடிவுகளாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் ஐரோப்பாவிலிருந்து சீனாவுக்கு திரும்பிய ஐ.டி ஊழியருக்கு விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை நடந்தது. அதில் அவருக்கு தொற்று இருப்பது தெரிந்தது. அந்நபர் கடந்த ஏப்ரலில் கொரோனா தொற்றுக்கு ஆளாகி குணமடைந்தவர். அவருக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதே போல் அமெரிக்கா, தென் கொரியா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் தொற்று ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியானது.

கொரோனாவிலிருந்து குணமடைந்தவருக்கு மீண்டும் தொற்று ஏற்படுவது பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. இது பற்றி அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் கூறியுள்ளதாவது: ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அறிகுறி உருவானவுடன் மூக்கு மற்றும் தொண்டையில் நேரடி வைரஸின் அளவு கணிசமாக குறையும், பெரும்பாலான மக்களுக்கு தொற்று 10 நாட்களுக்கு மேல் நீடிக்காது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள், கடுமையான நோய் உள்ளவர்களில் இது 20 நாட்கள் நீடிக்கும். கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவரின் உடலில் மூன்று மாதங்கள் வரை குறைந்த அளவு வைரஸ் இருக்கலாம். அவர்கள் மூன்று மாதங்களுக்குள் மீண்டும் பரிசோதிக்கப்பட்டால், கொரோனா இருப்பதாக முடிவு வருவதற்கான வாய்ப்பு உண்டு. ஆனால் அவர் உடலிலிருந்து கொரோனா வைரஸ் பரவாது என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: