மாவட்டத்தில் 3 ஆண்டுகளாக வருவாய்த்துறை உதவியாளர்களுக்கு பணி உயர்வு இல்லை: போராட்டம் நடத்த முடிவு

ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3 ஆண்டுகளாக வருவாய்த்துறை உதவியாளர்களுக்கு பணி உயர்வு இல்லையென வருவாய்த்துறை உதவியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர், உத்திரமேரூர், வாலாஜாபாத் ஆகிய 5 தாலுகா உள்ளன. இந்த தாலுகா அலுவலகங்களில் தாசில்தார், மண்டல தாசில்தார், துணை தாசில்தார், உதவியாளர் உள்ளிட்ட அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் பணியில் உள்ளனர். தற்போது கடந்த 3 ஆண்டுகளாக தாலுகா அலுவலகங்களில் பணி புரியும் உதவியாளர்களுக்கு துணை தாசில்தாராக பணி உயர்வு கொடுக்காமல் மாவட்ட நிர்வாகம் இழுத்தடிப்பு செய்வதாக வருவாய் துறை உதவியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து வருவாய் துறை ஊழியர்கள் கூறியதாவது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 5 தாலுகாவில் 27 பேருக்கு கடந்த 2017ம் ஆண்டு தற்காலிக துணை தாசில்தாராக பணியில் உள்ளனர். மேலும் 31 துணை தாசில்தார் பணியிடம் நிரப்பபடாமல் உள்ளது. தமிழக துறைகளில் முக்கியமான ஒன்றாக வருவாய் துறை உள்ளது. தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உதவியாளர்களுக்கு துணை தாசில்தாராக பணி உயர்வு அளிக்கப்படாமல் உள்ளது. மேலும் பெரும்பாலானவர்கள் ஓய்வு பெறும் வயதை நெருங்கி உள்ளனர். ஓய்வு பெறுவதற்குள் அவர்களுக்கு பணி உயர்வு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். தற்காலிகமாக துணை தாசில்தாராக பணியாற்றும் 27 பேரை நிரந்தரம் செய்ய வேண்டும், பணி உயர்வு பெறாமல் உள்ள 31 உதவியாளரை துணை தாசில்தாராக பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்றனர். மேலும் பதவி உயர்வு அளிக்கவில்லையென்றால் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: