வெஸ்டர்ன் , சதர்ன் ஓபன் ஜோகோவிச் சாம்பியன்

நியூயார்க்: அமெரிக்காவில் நடந்த வெஸ்டர்ன் , சதர்ன் ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப்போட்டியில் கனடா வீரர் மிலோஸ் ரயோனிக்குடன் (30வது ரேங்க்) மோதிய ஜோகோவிச் (செர்பியா) 1-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். பின்னர் சுதாரித்துக் கொண்டு தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 1-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று கோப்பையை முத்தமிட்டார்.

விறுவிறுப்பான இந்த போட்டி 2.00 மணி நேரத்துக்கு நீடித்தது. தனது 80வது ஏடிபி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ஜோகோவிச், மாஸ்டர்ஸ் 1000 அந்தஸ்து தொடர்களில் 35வது பட்டம் வென்று ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடாலின் சாதனையை சமன் செய்தார். அசரென்காவுக்கு கோப்பை: மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்காவுடன் மோதுவதாக இருந்த நவோமி ஒசாகா (ஜப்பான்), காயம் காரணமாக விலகுவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து அசரென்கா சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

Related Stories: