370 ரத்தை எதிர்த்து போராட முடிவு பாகிஸ்தான் ஆதரவுக்கு பரூக் அப்துல்லா பதிலடி: நாங்கள் யாருக்கும் கைப்பாவை அல்ல

புதுடெல்லி: ‘நாங்கள் யாருடைய கைப்பாவையும் கிடையாது,’ என்று தங்களுக்கு ஆதரவு தெரிவித்த பாகிஸ்தானுக்கு பரூக் அப்துல்லா பதிலடி கொடுத்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை மத்திய அரசு கடந்தாண்டு அதிரடியாக ரத்து செய்து, இம்மாநிலத்தையும் ஜம்மு காஷ்மீர், லடாக் என யூனியன் பிரதேங்களாக பிரித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த, இம்மாநிலத்தை சேர்ந்த தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும், இம்மாநில முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி உட்பட அனைத்து கட்சிகளையும் சேர்ந்த தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். இவர்களில் பரூக், உமர் அப்துல்லா சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, காங்்கிரஸ் உட்பட 6 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் சமீபத்தில், பரூக் அப்துல்லா தலைமையில் நடந்த கூட்டத்தில் பங்கேற்று, 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து ஒன்றாக போராட்டம் நடத்த முடிவு செய்தனர். ‘குப்கார் பிரகடனம்’ என அழைக்கப்படும் இந்த அறிவிப்புக்கு ஆதரவு தெரிவித்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி, ‘இந்த பிரகடனம் சாதாரண நிகழ்வு அல்ல. காஷ்மீரில் ஓராண்டுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றமாகும்,’ என தெரிவித்தார். இதற்கு நேற்று கடும் எதிர்ப்பு தெரிவித்த  பரூக் அப்துல்லா,  ‘‘காஷ்மீர் அரசியலை பாகிஸ்தான் எப்போதுமே அவமதித்து வந்துள்ளது. இப்போது திடீரென எங்கள் மீது பாசம் காட்டுகிறது. நாங்கள் பாகிஸ்தானுக்கோ அல்லது டெல்லிக்கோ மட்டுமின்றி, யாருடைய கைப்பாவையாகவும் இருக்க மாட்டோம். காஷ்மீர் மக்களுக்காக தொடர்ந்து போராடுவோம்,’’ என்றார்.

Related Stories: