அணைக்கட்டு அருகே மலைகிராமத்தில் போலீசாரை சுற்றிவளைத்து சாராயம் காய்ச்சும் கும்பல் தாக்குதல்: 2 போலீசுக்கு அடி, உதை; எஸ்ஐ.க்கு நெஞ்சுவலி

அணைக்கட்டு: வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த அல்லேரி கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் மக்களில் சிலர் சாராயம் காய்ச்சுவது, அனுமதியில்லாத நாட்டு துப்பாக்கிகளை வைத்து வனவிலங்குளை வேட்டையாவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில், அணைக்கட்டு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் 7 பேர் கொண்ட போலீஸ் குழுவினர் நேற்று, அல்லேரி மலை கிராமம் சென்றனர். பின்னர், அங்கிருந்து நெல்லி மரத்து கொல்லை பகுதிக்கு போலீசார் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். வழியில் மரங்கள் வெட்டி போடப்பட்டு இருந்தது. இதனால் பைக்குகளை நிறுத்திவிட்டு போலீசார் அவற்றை அப்புறப்படுத்த ஆரம்பித்தனர். அப்போது, சாராய வியாபாரி கணேசன் உள்ளிட்ட 20 பேர் கொண்ட கும்பல் போலீசாரை வழிமறித்தது.

அவர்களிடம் இருந்து செல்போன்களை பறித்துக் கொண்டு கற்கள் மற்றும் மூங்கில் கம்புகளை எடுத்து போலீசாரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பினர். இதில் ஏட்டு அன்பழகன்(35), போலீஸ் ராகேஷ்(29) ஆகிய இருவருக்கும் தலை மற்றும் உடலின் பல இடங்களில் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து, சப்- இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார், உடனடியாக அல்லேரி மலையில் இருந்து கீழே இறங்கினர். படுகாயம் அடைந்த 2 போலீசாரும் உடனடியாக வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையில், மலையில் இருந்து கீழே இறங்கிய சப்- இன்ஸ்பெக்டர் சிவக்குமாருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கினார். அவரை சக போலீசார் மீட்டு அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

Related Stories: