ஜம்முவில் தீவிரவாதிகள் ஊடுருவ ஏதுவாக இந்தியா-பாக். எல்லையில் சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு: எல்லை பாதுகாப்பு படை தீவிர சோதனை

புதுடெல்லி: ஜம்முவில் இந்தியா, பாகிஸ்தான் எல்லை வேலிக்கு அருகே ரகசிய சுரங்கப்பாதையை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் தீவிர சோதனை நடந்து வருகிறது. ஜம்முவின் சம்பா செக்டார் பகுதியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கடந்த வியாழக்கிழமை வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். கடந்த சில நாட்களாக அப்பகுதியில் கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், சில இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதை கவனித்த வீரர்கள் அங்கு சோதனை நடத்தினர். அப்போது சில பிளாஸ்டிக் மணல் பைகளை கொண்டு நன்கு மறைத்தபடி அமைக்கப்பட்டிருந்த ரகசிய சுரங்கப்பாதை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சுரங்கப்பாதை இந்திய எல்லை வேலியில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் உள்ளது. சுரங்கப்பாதை 8-10 பிளாஸ்டிக் மணல் பைகள் இருந்தன. அவவை கராச்சி மற்றும் ஷாகார்கர் பகுதிகளை சேர்ந்தவை என அச்சிடப்பட்டிருந்தன. மேலும், அதிலிருந்த காலாவதி தேதியின் படி சமீபத்திய பைகள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உடனடியாக எல்லை பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஜாம்வால் அப்பகுதிக்கு வந்து ஆய்வு செய்தார். அவர் கூறுகையில், ‘‘இந்த சுரங்கப்பாதை கட்டுமான நிலையில் உள்ளது’’ என்றார். பூமியை துளையிடும் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு, அந்த இடத்தில் தோண்டி சுரங்கத்தை வீரர்கள் ஆய்வு செய்தனர்.

இது சுமார் 20 மீ நீளமும், அதன் நுழைவாயில் பகுதியில் 25 மீ ஆழமும் இருந்தது. தீவிரவாதிகளும், போதை பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கடத்துவதற்கு ஏதுவாக, எல்லைவேலியை தாண்டி இந்த சுரங்கத்தை அமைக்க முயன்றுள்ளனர்.

சுரங்கப்பாதை உள்ள இடத்திலிருந்து சுமார் 700 மீட்டர் தொலைவில் பாகிஸ்தான் எல்லையின் குல்சார் முகாம் அமைந்துள்ளது. இந்த சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, தீவிர சோதனை நடத்த பிஎஸ்எப் இயக்குநர் ஜெரனல் ராகேஷ் அஸ்தானா உத்தரவிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து ஜம்மு எல்லையில், சுரங்கப்பாதை ஏதேனும் உள்ளதா என்பது குறித்து வீரர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு முன் பலமுறை ஜம்மு செக்டாரில் இதுபோன்ற சுரங்கப்பாதைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

* சர்வதேச எல்லையிலும் சோதனை

சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா, பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் பாகிஸ்தானை சேர்ந்த 5 தீவிரவாதிகள் ஊடுருவினர். அவர்களை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஜம்முவில் உள் சர்வதேச எல்லையில் ஏற்கனவே இதுபோன்ற சுரங்கப்பாதைகள் இருக்கின்றதா என தீவிர சோதனை நடந்து வருகிறது. இந்த நிலையில், சம்பா செக்டாரில் சுரங்கப்பாதை கண்டறியப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை இந்திய வீரர் மரணம்

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து சதுரா பகுதியில் வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். வீரர்கள் நடத்திய பதில்  தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் பலத்த காயமடைந்த வீரர் பிரசாந்த் சர்மா வீர மரணம் அடைந்தார். சம்பவ இடத்தில் இருந்து ஏராளமான வெடிபொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

Related Stories: