எப்போது துவங்கும் எய்ம்ஸ் கட்டிடப்பணி?: மத்திய அமைச்சரின் செப்டம்பர் அறிவிப்புக்கு சாத்தியமில்லை?

திருப்பரங்குன்றம்: மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில், அறிவித்தபடி செப்டம்பரில் கட்டிட பணிகள் துவங்குமா என  பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.மதுரை அருகேயுள்ள தோப்பூரில் சுமார் 224.24 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,264 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று 2018ம்  ஆண்டு ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டது. 2019, ஜனவரியில் மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டினார்.  இதனைத்தொடர்ந்து தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள், மத்தியகுழு மற்றும் ஜப்பானிய நிதிக்குழுவினர் இடத்தை ஆய்வு செய்தனர். அப்போது தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடம் மத்திய சுகாதாரத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது.  மருத்துவமனை அமைய உள்ள பகுதியில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என தெரிவித்தனர். தோப்பூரில் எய்ம்ஸ் அமைய  உள்ள 250 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் 224.24 ஏக்கரில் மருத்துவமனை அமைப்பதற்கும், 20 ஏக்கர் இந்திய எண்ணெய் நிறுவன குழாய்  வழித்தடத்திற்கும், 5 ஏக்கர் நிலம் சாலைப் பணிகளுக்குமான வரைபடங்கள் தயாரித்து தமிழக வருவாய்த்துறை, மத்திய சுகாதாரத்துறையிடம்  ஒப்படைத்தது.

இதுதொடர்பான அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்திற்கு செல்வதற்கான சாலைப்  பணிகள் கூத்தியார்குண்டு விலக்கிலிருந்து கரடிக்கல் வரை மத்திய சாலை நிதித் திட்டத்திலிருந்து ரூ.21 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில்  துவங்கியது. 6.4 கி.மீ நீளத்திற்கு இந்த சாலைகள் அமைக்கும் பணி தொடங்கி 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைய  உள்ள இடத்தில் ரூ.10 கோடி மதிப்பில் 5.50 கி.மீ சுற்றளவிற்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணியும், ஒரு சில நாட்களில் நிறைவடையும் நிலையில்  உள்ளது. பொதுமக்கள் கூறும்போது, ‘‘எய்ம்ஸ் மருத்துவமனை தோப்பூரில் அமைப்பதற்கான அரசாணையை மத்திய அரசு கடந்த ஜூலை மாதம்  வெளியிட்டது.  மதுரை வந்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன், செப்டம்பர் மாதம் மதுரையில் எய்ம்ஸ் கட்டிட பணிகள் துவங்கும்  எனத்தெரிவித்திருந்தார். ஆனால், இதற்கான எந்தவொரு அறிவிப்போ, நிதியோ ஒதுக்கவில்லை.

மேலும் ஜப்பானிய நிறுவனத்திடம் இன்னும் ஒப்பந்தம்  செய்யப்படாத நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட பணிகள்  செப்டம்பரில்  துவங்க வாய்ப்பு இல்லை. ஆர்டிஐயில் கேட்கப்பட்டதில் ஜப்பானிய நிறுவன ஒப்பந்தம்டிசம்பரில்தான் கையெழுத்தாகும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட பணிகள் துவங்க மத்திய, மாநில  அரசுகள் காலம் தாழ்த்தாமல் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்’’ என்றனர்.

Related Stories: