ஒடிசா, ராஜஸ்தான் மாநிலத்தில் கொட்டித்தீர்த்த கனமழை...!! வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம்!!!

ஒடிசா:  ஒடிசாவில் கொட்டிய கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஏராளமான கிராமங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்தனர். மேலும் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதனால் பல கிராமங்கள் இருளில் மூழ்கின.

இதேபோல் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் பல கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வெள்ளத்தில் சிக்கிய கிராம மக்களை பேரிடர் மீட்பு படையினர் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைத்தனர்.

இதனிடையே அடுத்த 24 மணி நேரத்தில் ஒடிசாவில் லேசான முதல் மிதமான மழை வரை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே ராஜஸ்தான் மாநிலத்தில் பஞ்சவார மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆற்றை கடக்க முயன்ற லாரி ஒன்று பெருக்கெடுத்தோடும் வெள்ள நீரில் அடித்துச்செல்லப்பட்டது. இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதனையடுத்து ஜம்மு-காஷ்மீரில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் சிக்கித் தவித்த 2 பேரை 34 மணி நேரத்திற்கு பின்னர், விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். கத்வா மாவட்டத்தில் ஆற்று வெள்ளத்தில் இவர்கள் இருவரும் அடித்து செல்லப்பட்ட நிலையில், இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.

Related Stories: