ஆரோவில் காவல் நிலையத்தில் ஆதரவாளர்களுடன் தகராறு!: புதுச்சேரி முன்னாள் எம்.பி. கண்ணன் மீது போலீசார் வழக்குப்பதிவு..!!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் காவல் நிலையத்தில் ஆதரவாளர்களுடன் சென்று தகராறு செய்ததாக புதுச்சேரி முன்னாள் எம்.பி. கண்ணன் மற்றும் அவரது மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் நிலம் வாங்கியது தொடர்பாக புதுச்சேரி முன்னாள் எம்.பி. கண்ணனுக்கும், புதுச்சேரி சக்தி நகரை சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கும் இடையே பிரச்சனை இருந்து வருகிறது. இது தொடர்பான புகாரின் பேரில் கண்ணனின் ஆதரவாளர்களை ஆரோவில் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

இதையடுத்து, தகவல் அறிந்து தனது ஆதரவாளர்கள் மற்றும் மகன் விக்கினேஷுடன் கண்ணன் காவல் நிலையத்திற்கு சென்று நேற்று இரவு தகராறு செய்துள்ளார். பின்னர் அங்கு வந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் அஜய் தங்கம் சமாதானம் செய்து கலைந்து போக செய்தார். இந்த நிலையில் காவல் நிலையத்தில் புகுந்து போலீசாரை ஒருமையில் பேசியதாக புதுச்சேரி முன்னாள் எம்.பி. கண்ணன் மற்றும் அவரது மகன் விக்னேஷ் மீது தகாத வார்த்தைகளால் பேசுதல், மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினராக இருந்த கண்ணன் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி தற்போது தனி கட்சி ஒன்றினை தொடங்கி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: