சூலாயுதத்தால் பூட்டை உடைத்து துணிகரம் வெக்காளி அம்மன் சித்தர் பீடத்தில் ரூ.10 லட்சம் நகைகள் கொள்ளை: மர்மநபர்களுக்கு வலை

செய்யூர்: செய்யூர் அருகே அம்மன் சித்தர் பீடத்தின் நுழைவாயிலை சூலாயுதத்தால் பூட்டை உடைத்து ரூ.10 லட்சம் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்ைப ஏற்படுத்தியது. செய்யூர் தாலுகா பவுஞ்சூர் அடுத்த பெரிய வெளிக்காடு கிராமத்தில் வெக்காளி அம்மன் சித்தர் பீடம் உள்ளது. இங்கு அதே கிராமத்தை சேர்ந்த கார்த்திகேயன் (30) என்பவர் பூசாரியாக உள்ளார். பீட நிர்வாகியாக, கிழக்கு கடற்கரை சாலை, அக்கரையை சேர்ந்த சேர்ந்த சுந்தரவதனன் என்பவர் செயல்படுகிறார்.

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த சித்தர் பீடத்தில், ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடத்தப்படும். தற்போது, கொரோனா ஊரடங்கால், தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களும் மூடப்பட்டுள்ளன. இதையொட்டி, மேற்கண்ட பீடமும் மூடப்பட்டது.தமிழக அரசு பிறப்பித்த ஊரடங்கு தளர்வின்படி கடந்த சில நாட்களுக்கு முன், ஆடி திருவிழா நடந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்ததும் பீடத்தின் நடையை பூட்டி விட்டு பூசாரி கார்த்திகேயன், வீட்டுக்கு சென்றார். நேற்று காலை வழக்கம் போல பீடத்தை திறக்க சென்றபோது, நுழைவாயில் பூட்டு உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது, கருவறையில் இருந்த சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான அம்மன் வைர மூக்குத்தி, வைர அட்டிக்கை, தங்கம், வெள்ளி பூஜை பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. இதையடுத்து பூசாரி, நிர்வாகி சுந்தரவரதனுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அவர் அங்கு சென்றார். தகவலறிந்து அணைக்கட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, விசாரித்தனர். அப்போது, நள்ளிரவில் அங்கு சென்ற மர்மநபர்கள், கோயில் முன்பு இருந்த சூலாயுதத்தை பிடுங்கி,  நுழைவாயில் பூட்டை உடைத்து, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: