காதலர்களை மிரட்டி கொள்ளையடித்த ரவுடியை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து பணம் வாங்கி அனுப்பி வைத்த போலீசார்: துணைபோகும் உயர் அதிகாரிகள்

நெல்லை: காதலர்களை மிரட்டி கொள்ளையடித்த ரவுடியை போலீஸ் நிலையம் அழைத்து வந்த போலீசார், பணம் வாங்கிக் கொண்டு விடுவித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை ரெட்டியார்பெட்டி மலை அருகே உள்ள சாலையில் இரு நாட்களுக்கு முன்னர் மாலை 6 மணிக்கு ஒரு காதல் ஜோடி பேசிக்கொண்டிருந்தது. அப்போது 4 பேர் கொண்ட கும்பல் பைக்கில் அங்கு வந்துள்ளது. இருவரும் காதலர்கள் என்று தெரிந்ததும், அவர்களை கத்தி மற்றும் அரிவாள் முனையில் மிரட்டியுள்ளது. பின்னர் அவர்களிடம் இருந்து செல்போன், ரூ.500 ஆகியவற்றை பறித்துள்ளது. அதில் காதலனிடம் ஏடிஎம் கார்டை வாங்கிய ஒருவன், பின் நம்பரை மட்டும் தெரிந்து கொண்டு நகருக்குள் உள்ள ஏடிஎம் சென்டரில் ஆயிரம் ரூபாய் பணம் எடுத்துள்ளான். பின்னர் ஏடிஎம் கார்டை காதலனிடம் கொடுத்து விட்டு, இருவரையும் மிரட்டி வீடியோ எடுத்துள்ளனர். போலீசில் புகார் செய்யக் கூடாது. புகார் செய்தால் வீடியோவை வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

பின்னர் காதலர்கள் மிரட்டப்படும் வீடியோவை கொள்ளை கும்பல் வெளியிட்டது. இந்த தகவல் நெல்லை நகர் முழுவதும் வைரலாக பரவியது. சம்பவம் நடந்த இடம், பெருமாள்புரம் போலீஸ்நிலையம் என்பதால், அந்த போலீசார் பாதிக்கப்பட்ட வாலிபரை தேடிப்பிடித்து புகார் வாங்கியது. அந்த வாலிபரும் கொள்ளையர்களுக்கு பயந்து போய் இருந்தார். பின்னர் போலீஸ் கேட்டுக் கொண்டதால் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் நடத்திய விசாரணையில் அவர் சீவலப்பேரி மருகால்தலையைச் சேர்ந்த பிரபல ரவுடி பூல்பாண்டி என்று தெரியவந்தது. அவருடன் அருணாச்சலம், குமார் ஆகியோர் சேர்ந்துதான் காதலர்களை மிரட்டி கொள்ளையடித்தது என்பதும் தெரிந்தது. பூல்பாண்டி மீது மட்டும் 21 வழக்குகள் நிலுவையில் உள்ளன. சீவலப்பேரி போலீஸ் நிலையத்தில் மட்டும் 11 வழக்குகள் உள்ளன. குற்றப்பதிவேட்டில் அவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. பல வழக்குகளில் தேடப்பட்டு வருபவராக உள்ளார்.

இதனால் அவரைப் பிடிக்க பெருமாள்புரம் போலீசில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி பூல்பாண்டி, அருணாச்சலம் ஆகிய 2 பேரையும் பிடித்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் போலீஸ்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் போலீஸ்நிலையத்தில் வைத்து, காவல் நீட்டிப்பு செய்வதற்கு முன்னரும் புகைப்படம் எடுத்தனர். காவல் நீட்டிப்புக்கான எழுத்துப் பணிகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த போலீஸ்நிலையத்தில் அதிகாரியாக உள்ளவருக்கு ஒரு போன் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியதும், பூல்பாண்டியை மட்டும் கைது செய்ய வேண்டாம். வெளியில் போய்விட்டு வருகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றவர், வெளியில் வைத்து 2 வக்கீல்களை சந்தித்துள்ளார். அப்போது ஒரு பை கைமாறியதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து பூல்பாண்டியை மட்டும் போலீசார் அனுப்பி விட்டு அருணாச்சலத்தை கைது செய்து, சிறையில் அடைத்து விட்டனர். இந்த தகவல் உயர் அதிகாரிகளுக்கு தெரிந்தும் கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் போலீஸ்நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு பூல்பாண்டி தனது ஆட்களுடன் சேர்ந்து, போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி கிட்டப்பா கல்லறைக்குச் சென்று கோஷம் எழுப்பி, சபதம் எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வெளியாகி போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை அருகே போலீஸ்காரர் சுப்பிரமணியம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடந்து கொல்லப்பட்டுள்ளார். அதில் ரவுடி துரைமுத்துவும் கொல்லப்பட்டார். துரைமுத்துவின் பிணத்தின் மீது வீச்சரிவாள் வைக்கப்பட்டு புதைக்கப்பட்டார். துரைமுத்துவுக்கு ஒரு போலீஸ்காரரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தியதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தற்போது கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்ட ரவுடி, போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட கிட்டப்பாவின் கல்லறையில் சபதம் எடுத்துள்ளது போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: