ஊரடங்கால் ஓட்டல், ரெசார்ட்டுகள் மூடல்: நீலகிரியில் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி

ஊட்டி:  கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நீடிக்கும் நிலையில், 2ம் சீசனுக்கும் சுற்றுலா பயணிகள் வர முடியாத நிலை உள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாத் தொழில் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. இதனை காண நாள்தோறும் வெளிநாடுகள், வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்துச் செல்கின்றனர். இரண்டாம் சீசனின்போது (செப்டம்பர், அக்டோபர்) மாதங்களில்தான் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவு வருவது வழக்கம்.

செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரை இங்கு நிலவும் மிதமான காலநிலை இவர்களுக்கு பிடித்து போகவே தற்போது அதிகளவு வருகின்றனர். பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளான இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மன், ஸ்பெயின், டென்மார்க் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அதேபோல், சில நாடுகளில் இச்சமயங்களில் வெப்பம் அதிகம் காணப்படும் நிலையில், அங்கிருந்து இந்தியாவிற்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர்.இந்தியா வரும் சுற்றுலா பயணிகளில் 90 சதவீதம் பேர் கோவா, கேரளா, தமிழ்நாடு, கர்நாடகம் போன்ற பகுதிகளுக்கு செல்கின்றனர். குறிப்பாக, தமிழகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளில் 90 சதவீதம் பேர் நீலகிரி மாவட்டத்திற்கு வருகின்றனர்.

அதுவும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர்கள் அதிகளவு ஊட்டி வருகின்றனர். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தங்களது மூதாதையர்கள் பலர் இங்கு வாழ்ந்த நிலையில், அவர்கள் வாழ்ந்த இடங்களையும், கல்லறைகளையும் தேடி வருகின்றனர். அதுமட்டுமின்றி, இங்கு நிலவும் சீதோஷண நிலை, அப்படியே இங்கிலாந்தை ஒத்து இருப்பதாலும் அவர்கள் அதிகளவு இங்கு வருகின்றனர். இது போன்று ஆண்டிற்கு ஒருமுறை அதிகம் வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை வரவேற்க நீலகிரி மாவட்டத்தில் ஓட்டல்கள், ரெசார்ட்டுக்கள் தயாராவது வழக்கம்.

இரண்டாம் சீசனின்போது, இங்குள்ள ஓட்டல்கள், காட்டேஜ்கள் மற்றும் ரெசார்ட்டுக்களில் சாதாரண நாட்களை காட்டிலும் சற்று அதிகமாக கட்டணங்கள் நிர்ணயிக்கப்படும். இதன்மூலம், இங்குள்ள சிறு வியாபாரிகள் முதல் பெரிய அளவில் சுற்றுலா தொழிலில் ஈடுபடுவர்களுக்கு வருவாய் கிடைப்பது  வாடிக்கை. நீலகிரியில் தேயிலை மற்றும் மலை காய்கறி விவசாயத்திற்கு அடுத்தப்படியாக சுற்றுலா தொழிலே மாவட்டத்தின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கிறது. இங்குள்ள அனைத்து தொழில்களுமே சுற்றுலாவை சார்ந்தே உள்ளன. இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால், முதல் சீசனான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அனைத்து ஓட்டல்கள், காட்டேஜ்கள் மற்றும் ரெசார்ட்டுக்களும், சுற்றுலா தலங்களும் அடைக்கப்பட்டன. சாதாரண சாலையோர வியாபாரிகள் முதல் பெரிய வியாபாரிகள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கொரோனா பாதிப்பு ஜூலை மாதத்திற்குள் ஒழிந்துவிடும்.  முதல் சீசனில் விட்டதை இரண்டாம் சீசனில் கைப்பற்றிவிடலாம் என்ற எண்ணத்தில் அனைத்து வியாபாரிகள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் காத்திருந்தனர். ஆனால், கொரோனா பாதிப்பு காரணமாக தொடர்ந்து ஊரடங்கு நீட்டித்துக் கொண்டே செல்கிறது. தற்போது இம்மாதம் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதம் முதல் இரண்டாம் சீசன் துவங்கும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பூங்காக்களும் தயார் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், சுற்றுலா பயணிகள் வர அனுமதிக்கப்படுமா?, சுற்றுலாதலங்கள் திறக்க அனுமதிக்கப்படுமா? என்ற சந்தேகம் உள்ளது.இரண்டாம் சீசனுக்கும் சுற்றுலா பயணிகள் வர அனுமதிக்காத பட்சத்தில் நீலகிரி மாவட்டத்தின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, வாடகை செலுத்த முடியாமல், குத்தகை தொகை செலுத்த முடியாமல் பலர் ஓட்டல்கள் மற்றும் காட்டேஜ்களை மூடிவிட்டு சென்ற நிலையில், மீதமிருக்கும் ஒரு சிலரும் நீலகிரி மாவட்டத்தில் இருந்து மூட்டை கட்டும் நிலை ஏற்படும்.

மேலும், உள்ளூர் வியாபாரிகள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்களும் பல்வேறு வரிகள், வாடகை போன்றவைகள் செலுத்த முடியாமல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, இதனை நம்பியுள்ள பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் பாதிக்கும் நிலை தொடர்கிறது. மேலும், மாவட்டத்தின் பொருளாதாரம் அதாள பள்ளத்திற்கு செல்லும் நிலை உருவாகியுள்ளது.

இந்தியா வரும் சுற்றுலா பயணிகளில் 90 சதவீதம் பேர் கோவா, கேரளா, தமிழ்நாடு, கர்நாடகம் போன்ற பகுதிகளுக்கு செல்கின்றனர். குறிப்பாக, தமிழகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளில் 90 சதவீதம் பேர் நீலகிரி மாவட்டத்திற்கு வருகின்றனர். அதுவும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர்கள் அதிகளவு ஊட்டி வருகின்றனர்.

Related Stories: