ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக கமலா முறைப்படி அறிவிப்பு: அமெரிக்க வரலாற்றில் சாதனை

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் முறைப்படி அறிவிக்கப்பட்டார். இதன் மூலம், அமெரிக்க வரலாற்றில் துணை அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட முதல் கருப்பின பெண் என்ற வரலாற்று சாதனையையும் அவர் நிகழ்த்தி உள்ளார். அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில், குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு ஜோ பிடெனும், துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரிசும் போட்டியிடுகின்றனர்.

துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிசை முறைப்படி அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி  காணொலி மூலம் நேற்று நடந்தது. இதில் அவர் பேசியதாவது:

 ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை ஏற்று கொள்கிறேன். இதை அனைத்து கருப்பின, உரிமைக்காக போராடும் பெண்களுக்கு சமர்ப்பிக்கிறேன். அதிபர் டிரம்ப் நமது துன்பங்களை, துயரங்களை அரசியல் ஆதாயமாக பயன்படுத்துகிறார். ஆனால், பிடென் நாம் எதிர்கொள்ளும் சவால்களை குறிக்கோள்களாக மாற்றுவார். நாங்கள் ஒரு மாற்றுப்புள்ளியாக திகழ்வோம். டிரம்ப் தலைமையிலான நிர்வாகத்தின் தோல்வியால்தான் கொரோனாவால் லட்சக்கணக்கான உயிர்களை, வாழ்வாதாரத்தை இழந்தோம். டிரம்பை விட சிறப்பாக செயல்படுவோம். நாம் தேர்வு செய்யும் அதிபர் ஒரு சிறந்த மாற்றத்தை கொண்டு வருபவராகவும், கருப்பர், வெள்ளையர், லத்தீன்-அமெரிக்கர், ஆசிய நாட்டினர், உள்நாட்டினர் என அனைவரையும் கொண்டு தேசத்தின் எதிர்காலத்தை கட்டமைப்பவராக இருக்க வேண்டும். அந்த சிறந்த அதிபராக ஜோ பிடென் தேர்வு செய்யப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

* தங்கையின் ரூபத்தில் அம்மா வாழ்கிறார்

துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு பங்கேற்கும் ஒவ்வொரு கூட்டத்திலும், தனது தாய் சியாமளாவை பற்றி கமலா பேசாத நாளில்லை. நேற்றைய கூட்டத்தில் கமலா பேசுகையில், ‘‘இந்த நேரத்தில் நீங்கள் அறிந்திராத  மற்றொரு பெண்ணை பற்றியும் கூறுகிறேன். இந்தியாவின் தமிழகத்தில் இருந்து புற்றுநோயை குணப்படுத்த வேண்டும் என்ற கனவுடன் அமெரிக்கா வந்த எனது தாய் சியாமளா குறித்து நினைவு கூற வேண்டும். தனது 19 வயதில் மருத்துவப்  படிப்புக்காக அமெரிக்கா வந்தவர் எனது தாய். அனைத்து போராட்டங்களுக்கும் இடையே எங்களை வளர்த்து ஆளாக்கினார். இன்று அவர் எங்களுடன் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இருப்பினும், அவர் சாகவில்லை. என் தங்கை மாயாவின் ரூபத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்,’’ என்றார்.

* முன்மொழிந்த குடும்பம்

கமலா ஹாரிசின் தங்கை மாயா ஹாரிஸ், அவரது மகள் மீனா, வளர்ப்பு மகள் எலா எம்ஹாப் ஆகியோர் கமலாவை துணை அதிபர் வேட்பாளராக முன் மொழிந்தனர். இதற்கான ஏற்பாடுகளை செய்து உதவியவர் வேறு யாருமல்ல, கமலாவின் அரசியல் வழிகாட்டியும் முன்னாள் அதிபருமான ஒபாமா ஆவார். அப்போது பேசிய மாயா, ``தனது முதல் மகள் வரலாற்று சாதனை படைப்பதை பார்க்க அம்மா இப்போது நம்முடன் இல்லை என்றாலும், உன்னை நான் நேசிக்கிறேன். உன்னால் மிகவும் கவரப்பட்டு உள்ளேன். உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன்,’’ என்றார்.

Related Stories: