ஓபிசி மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்க மத்தியஅரசு அமைத்த உயர்மட்ட குழுவில் உமாநாத் ஐஏஎஸ் நியமனம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க கோரி திமுக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல கட்சிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தன. இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் கடந்த மாதம் 27ம் தேதி தீர்ப்பளித்தது. அதன்படி, மருத்துவ படிப்புகளுக்கான இடங்களில் அகில இந்திய ஒதுக்கீடுகளில், இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அளிக்கப்படும் இடங்கள் தொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்றலாம். எனவே, இடஒதுக்கீடு குறித்து மத்திய, மாநில அரசுகளின் சுகாதார துறை அதிகாரிகள், இந்திய மருத்துவ கவுன்சில், இந்திய பல் மருத்துவ கவுன்சில் ஆகியோர் குழு அமைத்து, கலந்தாலோசித்து இடஒதுக்கீடு வழங்குவது குறித்து 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் மத்திய அரசு தமிழக அரசுக்கு ஒரு எழுதி இருந்தது. அதில், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பில் அடிப்படையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட உள்ளது. அதற்கு மாநில அரசு சார்பில் ஒரு அதிகாரியை நியமனம் செய்து அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. அந்த கடிதத்தை மேற்கோள்காட்டி தமிழக தலைமை செயலாளர் சண்முகம், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷனுக்கு நேற்று ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறி இருப்பதாவது: மருத்துவ படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு (ஓபிசி) மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவது பற்றி மத்திய அரசு சார்பில் ஒரு கமிட்டி அமைக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த உயர்மட்ட கமிட்டியில் தமிழக அரசு சார்பில் தமிழ்நாடு மருத்துவ சேவை கழக மேலாண் இயக்குனராக உள்ள உமாநாத் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: