செமஸ்டர் கட்டணம் கட்டாவிட்டால் பிஎச்டி படிப்பை தொடர முடியாது: அண்ணா பல்கலை.அறிவிப்பு

சென்னை: பிஎச்டி ஆய்வுப் படிப்பை தொடரும் மாணவர்கள் தங்கள் செமஸ்டருக்கான கட்டணத்தை கட்டத் தவறினால் பிஎச்டி படிப்பை தொடர முடியாது என்று அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. இதனால் ஆராய்ச்சி மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அண்ணா பல்கலைக் கழகத்துடன் இணைந்த பொறியியல் கல்லூரிகளில் படித்து வரும் முதல், இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு தேர்வுகள் கொரோனா காரணமாக ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், சில பொறியியல் கல்லூரிகள் மாணவர்களிடம் வசூல் செய்த தேர்வுக் கட்டணத்தை அண்ணா பல்கலைக் கழகத்துக்கு செலுத்தவில்லை. தேர்வு ரத்து செய்துவிட்டு, தேர்ச்சி அறிவிக்க உள்ளதால் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்ற எண்ணத்தில் பொறியியல் கல்லூரிகள் இருந்தன. ஆனால், தேர்வுக் கட்டணம் செலுத்தாத மாணவர்களின் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக் கழகம் நிறுத்தி வைத்தது. இது குறித்து தினகரனில் நேற்று விரிவான செய்தி வெளியானது.

இதையடுத்து, நிறுத்தி வைத்திருந்த மாணவர்களின் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக் கழகம் நேற்று  காலைவெளியிட்டது. வழக்கமாக 75 மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு இந்த முறை கூடுதலாக 10 மதிப்பெண்கள் வரை கிடைத்துள்ளது. இதனால் மாணவ மாணவியர் மகிழ்ச்சிஅடைந்துள்ளனர். இந்நிலையில், பிஎச்டி என்னும் ஆய்வுப் படிப்பு படித்து வரும் ஆராய்ச்சி மாணவர்கள் செமஸ்டர் தேர்வுக்கான கட்டணத்தை உடனே செலுத்த வேண்டும் என்று அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.

* அண்ணா பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சி மையம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஜூலை மாதத்துக்கான செமஸ்டர் கட்டணத்தை 19ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். தவறினால் ரூ.1000 அபராதத் தொகையுடன் சேர்த்து 26ம் தேதி செலுத்த வேண்டும். இறுதி வாய்ப்பாக செப்டம்பர் 2ம் தேதி கூடுதல் அபராதமாக ரூ.3500 செலுத்த வேண்டும். இந்த கால அவகாசத்தில் செலுத்த தவறினால் பிஎச்டி படிப்புக்கு பதிவு செய்துள்ள நபர்களின் பதிவுகள் நீக்கப்படும். இந்த அறிவிப்பு கடந்த 3 முதல் 5 ஆண்டுகளாக பிஎச்டி படித்து வருவோர் தாங்கள் அந்த படிப்பில் இருந்து பாதியில் வெளியேறும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பிஎச்டி மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: