ஐப்பசி மாத பூஜைகளின்போது சபரிமலையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்களா? தீவிர ஆலோசனையில் தேவசம்போர்டு

திருவனந்தபுரம்: பிரசித்தி பெற்ற சபரிமலை கோயிலில் ஐப்பசி மாத பூஜைகளுக்கு கோயில் நடை திறக்கும்போது பக்தர்களை அனுமதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் முதல் கேரளாவில் பிரசித்திபெற்ற சபரிமலை உள்பட அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் முதல் திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்கு சொந்தமான கோயில்கள் அனைத்திலும் பக்தர்கள் நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். முக கவசம் அணிந்தவர்களுக்கு மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. சமூக இடைவெளி கடைபிடித்து தரிசனம் செய்கின்றனர். வழிபட வருபவர்களின் பெயர் விவரங்கள் பதிவு செய்யப்படுகிறது. ஆனால் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் இதுவரை அனுமதிக்கப்படவில்லை.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தலைமையில் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் நவம்பர் மாதம் தொடங்க உள்ள மண்டல கால பூஜைக்கு பக்தர்களை அனுமதிப்பது குறித்து முதல்வர் தலைமையில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் இறுதி முடிவு எடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலையில் முதல்வர் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் பக்தர்களை மண்டல காலத்தின்போது அனுமதிக்க முடிவு செய்தால், அதற்கு முன்பாகவே ஐப்பசி மாதத்துக்கு நடை திறக்கும்போது பக்தர்களை அனுமதிக்கலாமா? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

மண்டல காலத்தில் பக்தர்களின் தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு செப்டம்பர் மாதத்திலேயே தொடங்கி விடும். இரு மாதத்துக்கு முன்பே கொரோனா இல்ைல என்று சான்றிதழை தாக்கல் செய்த பின்னர் சபரிமலை வரும்போது அவர்களுக்கு கொரோனா இருந்தால் சிக்கல் ஏற்பட்டு விடும். எனவே சபரிமலை வரும் பக்தர்களை பரிசோதிப்பதற்காக நிலக்கல்லில் ஆன்டிஜென் பரிசோதனை நடத்தப்படும். இந்த பரிசோதனையில் கொரோனா இருப்பது உடனுக்குடன் தெரிந்துவிடும். இதில் யாருக்காவது கொரோனா இருந்தால் அவர்களை திருப்பி அனுப்புவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: