கட்சித்தலைவரை தேர்வு செய்ய வலியுறுத்தி சோனியா காந்திக்கு 100 தலைவர்கள் கடிதம்: முன்னாள் செய்தி தொடர்பாளர் சஞ்சய் ஜா தகவலால் சர்ச்சை

புதுடெல்லி: வெளிப்படையான தேர்தல் நடத்தி காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும்படி, வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட மூத்த தலைவர்கள் சோனியா காந்திக்கு கடிதம் எழுதி உள்ளதாக அக்கட்சியின் முன்னாள் செய்தி தொடர்பாளர் சஞ்சய் ஜா கூறியிருப்பது சர்ச்சையாகி உள்ளது. காங்கிரஸ் கட்சி கடந்த மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அகமது படேல், குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் எடுத்து கூறியும் அவர் மீண்டும் பதவியேற்க மறுத்து விட்டார். இதையடுத்து கடந்தாண்டு ஆகஸ்ட் 10ம் தேதி சோனியா காந்தி இடைக்கால தலைவராக பொறுப்பேற்றார்.

தற்போது, சோனியா காந்தி பொறுப்பேற்று ஓராண்டு முடிவடைந்த நிலையில், ராகுல் காந்தி தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்ற கோரிக்கை கட்சியில் மீண்டும் வலுத்து வருகிறது. சஞ்சய் ஜா உட்கட்சி நடவடிக்கைகளை விமர்சித்து வந்ததால், கடந்த மாதம் செய்தி தொடர்பாளர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், சஞ்சய் ஜா தனது நேற்றைய டிவிட்டர் பதிவில், ``எம்பி.க்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட தலைவர்கள், கட்சியின் நிலைமையை பார்த்து பொறுக்க முடியாமல், வெளிப்படையான தேர்தலை நடத்தி கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்ய வலியுறுத்தி சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்,’’ என்று கூறியுள்ளார். இது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

*  பாஜகவின் கைக்கூலி

சஞ்சய் ஜாவின் தகவலுக்கு காங்கிரஸ் மறுப்பு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா அவரது டிவிட்டர் பதிவில், ``பேஸ்புக் உடனான பாஜ.வின் தொடர்பு பற்றிய விவகாரத்தின் கவனத்தை திசை திருப்ப, தொலைக்காட்சி விவாதங்கள், ஊடகங்களில் தவறான தகவல் அளித்து வழிநடத்தும் குழு, இன்று வாட்ஸ் அப்பில், காங்கிரஸ் தலைவர்களிடம் இருந்து வராத ஒரு கடிதத்தை வந்ததாக கூறி, பதிவேற்றம் செய்துள்ளது. இது பாஜ.வின் கைக்கூலிகளின் வேலையாகும்,’’ என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

Related Stories: