கொரோனா நோயாளிகளின் தொலைபேசி உரையாடல்களை சேகரிக்க கூடாது: கேரள அரசுக்கு எதிராக வழக்கு

திருவனந்தபுரம்: கொரோனா நோயாளிகள் மற்றும் குவாரன்டைனில் இருப்பவர்களின் தொலைபேசி பதிவுகளை போலீசார் சேகரிக்க கூடாது என உத்தரவிடக் கோரி, கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னித்தாலா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தமது மனுவில் கேரள அரசின் இந்த நடவடிக்கை அரசியலமைப்புக்கு எதிரானது என்று குறிப்பிட்டுள்ள அவர், தனிநபர் சுதந்திரத்தை அது மீறுவதாக உள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். கேரளாவை ஒரு கண்காணிப்பு மாநிலமாக மாற்ற அரசு முயலுவதாக கூறியுள்ள அவர், இது போன்ற ஒட்டுக்கேட்பு வேலையில் ஈடுபடக்கூடாது என கேரள போலீசுக்கும், தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் உத்தரவிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

இதே குற்றச்சாட்டை கூறியுள்ள கேரள மாநில பாஜக, மாநிலத்தில் போலீஸ் ராஜ்யம் நடப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றை அறிவியல்பூர்வமாக கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள முதல்வர் பினராயி விஜயன், தொலைபேசி பதிவுகள் தவறாக பயன்படுத்தப்பட மாட்டாது என உறுதி அளித்துள்ளார். ரமேஷ் சென்னித்தலாவின் மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநிலத்தில் ஒரே நாளில் 1,530 பேருக்கு கொரோனா இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டது. தற்போது 15,310 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கொரோனாவில் இருந்து 28,878 பேர் குணமடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளது.

Related Stories: