நூறுநாள் பணி நடைபெறும் இடங்களில் கொரோனா பரிசோதனை செய்ய விடாமல் இடையூறு; தொற்றாளர்கள் அடையாளம் காண்பதில் திடீர் சிக்கல்

அறந்தாங்கி: தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழக அரசு கொரோனா பரவாமல் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. சுகாதாரத்துறையினர் தினமும் பல்வேறு இடங்களில் மக்களிடம் கொரோனா பரிசோதனைக்காக சளி, ரத்த மாதிரிகளை சேகரித்து வருகின்றனர். கிராம பகுதிகளில் ஒரு கிராமத்தில் கொரோனா தொற்று உறுதியானால், அந்த கிராமத்திற்கு அருகே உள்ள கிராமங்களை சேர்ந்தவர்களுக்கும் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கிராம பகுதிகளில் வீடு வீடாக சென்று பரிசோதனைக்கான மாதிரிகளை சேகரிப்பது சிரமம் ஏற்படுகிறது. இதனால் சுகாதாரத்துறையினர் நூறுநாள் வேலை நடைபெறும் இடங்களுக்கு மருத்துவ குழுவினருடன் சென்று கொரோனா பரிசோதனைக்காக மாதிரிகளை சேகரித்து வருகின்றனர். இதனால், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில ஊராட்சிகளில் நூறுநாள் வேலை நடக்கும் இடத்திற்கு கொரோனா பரிசோதனைக்கு செல்லும் சுகாதாரத்துறையினரிடம் பொதுமக்கள் ஆர்வத்துடன் மாதிரிகளை கொடுக்க தயாராக உள்ளனர். ஆனால் ஒரு சிலர், நூறுநாள் வேலை செய்யும் மக்களுக்கு பரிசோதனை மாதிரி எடுக்கக்கூடாது என மிரட்டுகின்றனர். சுகாதாரத்துறை, ஊராட்சி மன்ற தலைவர்கள் விளக்கி கூறினாலும், அதை காதில் வாங்கி கொள்ளாமல் மக்களை அவர்கள் குழப்புகின்றனர்.

இதனால் மக்களும் பரிசோதனைக்காக மாதிரிகளை கொடுக்க மறுக்கின்றனர். கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்காக பரிசோதனை செய்ய நூறுநாள் வேலை நடக்கும் இடத்தில் பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுத்து அதிகாரிகளுடன் பிரச்னையில் ஈடுபடுபவர்களால் கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காண முடிவதில்லை. இதனால் அவர்கள் மூலம் கொரோனா தொற்று அதிகமாக பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்று எடுக்க தயங்குபவர்கள் மீது, கொரோனா பரிசோதனை செய்ய செல்லும் இடத்தில் சுகாதாரத்துறையினரை பணி செய்யவிடாமல் மக்களை குழப்பும் செயலில் ஈடுபடுபவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: