ஓசூர் அருகே காட்டுயானை தாக்கி இருவர் பலி...!! உரிய இழப்பீடு வழங்கக்கோரி கிராமமக்கள் போராட்டம்!!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஒற்றை காட்டுயானை தாக்கி 2 பேர் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த புலியரசி கிராமத்தில் விவசாய தோட்டத்திற்கு சென்ற இருவரை அங்கிருந்த ஒற்றை காட்டுயானை தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த முனிராஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த நிலையில் காட்டுயானை ஊருக்குள் நுழைவதை தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

முனிராஜ் உடலுடன் போராட்டம் நடத்திய அவர்கள் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் வேப்பனவல்லி சட்டமன்ற உறுப்பினர் முருகன் மற்றும் காவல் துறை அதிகாரிகள் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பின்னர் அவர்கள் அளித்த உறுதிமொழியை தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனையடுத்து கிருஷ்ணகிரி ஓசூர் அருகே சாணமாவுக்காட்டில் இருக்கும் யானைகள் அவ்வப்போது ஊருக்குள் புகுந்து பொது மக்களை தாக்கி வருகிறது. இதனையடுத்து கர்நாடக வனத்துறையினர் ஓசூர் வனப்பகுதிக்கு யானைகளை விரட்டி வருவதால், தமிழக எல்லைக்குள் புகும் காட்டுயானைகள் கிராம மக்களை தொடர்ந்து தாக்கி வருகிறது. இதனால் இதற்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்பதே கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: