கெலாட் - சச்சின் மோதல் முடிவுக்கு வந்த நிலையில் ராஜஸ்தான் பேரவை இன்று கூடுகிறது: நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறது பாஜ

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக நடந்த அரசியல் குழப்பத்துக்கு இடையே, இம்மாநில சிறப்பு பேரவை கூட்டம் இன்று நடக்கிறது. ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவி, மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை கட்சி மேலிடம் பறித்தது. அவர் தனது ஆதரவு எம்எல்ஏ.க்கள் 18 பேருடன் கட்சியை விட்டு விலகியதால், கெலாட் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டது. அவர் பெரும்பான்மையை இழந்து விட்டதாக பாஜ கூறியது. இதனால், கடந்த ஒரு மாதமாக ராஜஸ்தான் அரசியலில் குழப்பம் நிலவியது. சில தினங்களுக்கு முன் ராகுல், பிரியங்கா சச்சின் பைலட் சந்தித்து பேசியதை தொடர்ந்து, கெலாட் அரசில் ஏற்பட்ட  குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், இம் மாநில சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் இன்று நடக்கிறது. கெலாட் - சச்சின் இடையே சமரசம் ஏற்பட்டு விட்டதால் ஏமாற்றம் அடைந்துள்ள பாஜ., இன்றைய கூட்டத்தில் கெலாட் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர இருப்பதாக தெரிவித்துள்ளது. இதை முறியடிப்பது போல், பேரவையில் தானே நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப் போவதாக கெலாட் நேற்று மாலை அதிரடியாக அறிவித்தார். இந்நிலையில், ஆட்சியை கவிழ்க்க சதி திட்டம் தீட்டியதாக பைலட் ஆதரவு எம்எல்ஏ.க்களான பன்வர்லால் சர்மா, விஷ்வேந்திரா சிங் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்தனர். இதை காங்கிரஸ் நேற்று ரத்து செய்தது. பகுஜன் எம்எல்ஏ.களுக்கு அனுமதி: ராஜஸ்தானில் கடந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு பின் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த 6 எம்எல்ஏ.க்கள் காங்கிரசில் சேர்ந்தனர். இதை எதிர்த்து, நீதிமன்றத்தில் பகுஜன் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த 6 எம்எல்ஏ.க்களும் இன்று நடைபெறும் பேரவை சிறப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள உச்ச நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்தது.

* அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...

காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சி கூட்டம், முதல்வர் கெலாட்டின் அதிகாரப்பூர்வ அரசு இல்லத்தில் நேற்று மாலை நடந்தது. இந்த கூட்டம் முடிந்த பிறகு அங்கு வந்த சச்சின் பைலட், கெலாட்டை சந்தித்து கை குலுக்கினார். அப்போது, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கே.சி. வேணுகோபால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: