திமுக பவளவிழா பொதுக்கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் அமைச்சர் ஆகியோர் ஆற்றிய உரை;
விசிக தலைவர் திருமாவளவன்: பவளவிழா காணும் திமுக இந்திய அளவில் அனைத்து அரசியல் இயக்கங்களுக்கும் வழிகாட்டக்கூடிய மகத்தான பேரியக்கம்; வெறும் தேர்தல் அரசியலை முன்னிறுத்தி அதிகாரத்தை நோக்கி இயங்குகிற சராசரி அரசியல் கட்சி அல்ல. அதனால் தான் 75 ஆண்டுகளாக அதே வீரியத்தோடு வீறுகொண்டு வெற்றி நடை போடுகிற இயக்கமாகவும், திமுக 6வது முறையாக ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ளது. தேர்தலுக்காக செயல்படும் கட்சி திமுக அல்ல; அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வழிகாட்டும் இயக்கமாக உள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்: எங்கள் கூட்டணி தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு கூட்டணி இல்லை; கொள்கைக்கான கூட்டணி; லட்சிய கூட்டணி; இந்த கூட்டணி தொடரும், தேர்தல் வெற்றியும் தொடரும். தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளோம்; எதிர்காலத்திலும் இந்த வெற்றி தொடரும்; பல முறை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து, தற்போதும் ஆட்சியில் உள்ளது திமுக; கல்வி திட்டம், மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி நிலுவை, மீனவர் பிரச்சனை குறித்து பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார் முதல்வர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: இந்தியாவின் இலக்கை தீர்மானிப்பதில் திமுகவின் பங்கு முக்கியமானதாக இருக்கிறது.ஒரே நாடு ஒரே தேர்தல், புதிய கல்வி கொள்கை என கூட்டாட்சி தத்துவத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்துகின்றனர். பாஜக ஆட்சியை அகற்றும் வரை, நமது வெற்றியை நோக்கி பயணிப்போம். பல காலகட்டங்களில் ஒன்றிய அரசில் அங்கம் வகித்த கட்சி திமுக; அனைவரையும் ஒருங்கிணைத்துச் செல்லும் கட்சி திமுக; ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்போது எத்தனையோ திட்டங்களை நிறைவேற்றிய பெருமை திமுகவுக்கு உண்டு.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: விண்ணும், மண்ணும் இருக்கும்வரை திமுக நிலைத்திருக்கும்; கோடிக்கணக்கான தமிழ் மக்களின் இதயங்களில் வீற்றிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; திமுகவை அழித்துவிடலாம் என இந்துத்துவா சக்திகளும் சனாதன சக்திகளும் திட்டம் தீட்டுகின்றன; இந்தியாவுக்கே தமிழ்நாடு வழிகாட்டுகிறது.
மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்: ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரே மாதிரி தான் திமுக செயல்படும், இட ஒதுக்கீடு என்பது திமுக கொண்டு வந்தது என்பதை மறக்கக் கூடாது. முதலமைச்சர் பதவிக்கு போட்டி கிடையாது, துணை முதலமைச்சர் பதவிக்கு தான் போட்டி; யார் முதலமைச்சர் என்றால் திமுகவைச் சேர்ந்தவர் தான் முதலமைச்சர், துணை முதலமைச்சர் என்று சொன்னாலும் திமுகவைச் சேர்ந்தவர் தான்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்: திராவிட இயக்கம் இன்று, நேற்று தோன்றிய இயக்கம் இல்லை. இந்திய நாட்டில் உரிமை மறுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட அனைத்து மக்களுக்கும் கல்வியில், வேலைவாய்ப்பில் உரிமை வழங்க வேண்டும் என்ற சமூக நிதி இயக்கத்தின் வழித்தோன்றல் தான் இந்த திராவிட இயக்கம். மக்கள் இயக்கமாக, மக்களின் பாதுகாப்பு அரணாக திமுக இன்று வரை இருந்து வருகிறது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சாதிகளுக்கும் சமநீதி திமுக ஆட்சியில் வழங்க வேண்டும்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை: பல்லவர்களின் தலைநகரில் திமுக பவள விழா நடைபெறுகிறது; தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; தமிழ்நாட்டில் நல்லாட்சி நடக்கிறது என எதிரிகளும் வாழ்த்துகின்றனர்; எல்லோரும் போற்றப்படும் முதலமைச்சராக உள்ளார் மு.க.ஸ்டாலின். தேசத்தை பாசிச சக்திகள் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன, பாசிச சக்திகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிம்ம சொப்பனமாக இருப்பார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கக்கூடிய சிங்கமாக உள்ளது திமுக; பல்வேறு சோதனைகளையும், வேதனைகளையும் கடந்து வந்த கட்சி திமுக; 75 ஆண்டு காலத்தில் நெருப்பாற்றில் நீந்தி கடந்திருக்கிறது; ஒப்பற்ற இயக்கமாக விளங்குகிறது திமுக.
அமைச்சர் துரைமுருகன்: 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய நாகரிகம் திராவிட நாகரிகம், ஹரப்பா, மொகஞ்சதாரோ நாகரிகத்துக்கு உரிமை படைத்தது திராவிட நாகரிகம். நாம் செலுத்தும் வரியை நமக்கு நிதியாக கொடுக்க ஒன்றிய அரசு மறுக்கிறது.
The post திமுக பவளவிழா பொதுக்கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் உரை appeared first on Dinakaran.