மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை இல்லை பாபநாசம் அணை நீர்மட்டம் 103 அடியாக உயர்ந்தது

வி.கே.புரம்: மேற்கு தொடர்ச்சி மலையில் 2 நாட்களாக மழை இல்லாததால் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பாபநாசம் அணையைத் தவிர மற்ற அணைகளில் நீர்மட்டம் உயரவில்லை. நீர்வரத்து அதிகரிப்பால் பாபநாசம் அணையில் நேற்று 3 அடி உயர்ந்துள்ளது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தது. இதையொட்டி குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. பாபநாசம் அணை உள்ளிட்ட அனைத்து அணைகளிலும் நீர்மட்டம் ‘கிடுகிடு’ வென உயர்ந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை இல்லாததால் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அணைகளின் நீர்மட்டம் உயரவில்லை.

பாபநாசம் அணைக்கு நீர்வரத்து உள்ளதால் 100.65 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 3 அடி உயர்ந்து 103.60 அடியானது. அணைக்கு வினாடிக்கு 2577.11 கனஅடி நீர் வருகிறது. 791 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 130.74 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 73.45 அடியாகவும், வடக்கு பச்சையாறு 10.25 அடியாகவும், கொடுமுடியாறு 44.50 அடியாகவும், கடனாநதி அணை 82.40 அடியாகவும், ராமநதி 82 அடியாகவும், கருப்பாநதி அணை 69.76 அடியாகவும், குண்டாறு 36.10 அடியாகவும், அடவிநயினார் அணை 131.25 அடியாகவும் நீடிக்கிறது.

மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 219 கனஅடி நீர் வருகிறது. 25 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று குண்டாறு அணையில் 13 மிமீ மழையும், அடவிநயினார் அணையில் 3 மிமீ மழையும் பதிவாகியுள்ளது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் மழை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: