ரஷ்யா கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசியை ஆய்வு செய்ய விரும்புவதாக உலகம் சுகாதார நிறுவனம் அறிவிப்பு!

ஜெனீவா: உலகின் முதல் தடுப்பூசியை பதிவு செய்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ள நிலையில், அதனை ஆய்வு செய்ய உலக சுகாதார நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று உலகில் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், ஒவ்வொரு நாடுகளும் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் பகல் இரவாக பாடுபட்டு வருகின்றன. இதற்கிடையே, உலகின் முதல் கொரோனா தடுப்பூசி பயன்படுத்த தயாராகி விட்டதாக ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தடுப்பூசியை தனது சொந்த மகளுக்கு போட்டு நல்ல பலன் கிடைத்துள்ளதாக கூறியுள்ள அதிபர்  விளாடிமிர் புடின், வரும் அக்டோபர் மாதம் முதல் நாட்டு  மக்களுக்கும் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். ரஷ்யா கண்டுபிடித்துள்ள மருந்துக்கு ஸ்புட்னிக் வி என பெயரிடப்பட்டுள்ளது.

இது சோவியத் யூனியன் முதல்  முறையாக விண்வெளிக்கு அனுப்பிய விண்கலத்தின் பெயராகும். இந்த மருந்தை வாங்க இந்தியா, சவூதி அரேபியா, யூஏஇ, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட குறைந்தபட்சம் 20 நாடுகள் ஆர்வம் காட்டி வருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இந்த நிலையில் ரஷ்யா கண்டுபிடித்துள்ள தடுப்பூசியை ஆய்வு செய்ய விரும்புவதாக உலகம் சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. எப்படி தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தது என்று உலக சுகாதார நிறுவனம் கேள்வி எழுப்பியுள்ளது. ஏற்கனவே 2000 பேருக்கு இந்த தடுப்பூசியை பரிசோதனை செய்து முடித்துள்ள நிலையில் உலக சுகாதார நிறுவனம் ஆய்வு செய்து பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளதை ரஷ்யா வரவேற்றுள்ளது. உலக சுகாதார நிறுவனம் அதிகாரபூர்வமாக இந்த தடுப்பூசியை ஏற்றுக் கொண்டால் உலகம் முழுவதும் இந்த தடுப்பூசி விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: