எம்எல்ஏக்கள் மனக்குமுறல் அடைவது இயல்புதான்....மறப்போம், மன்னிப்போம்: சச்சின் பைலட் அணி திரும்பியது குறித்து அசோக் கெலாட் கருத்து

ஜெய்ப்பூர்: எம்எல்ஏக்கள் மனக்குமுறல் அடைவது இயல்புதான் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார். ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் குழப்பம் அம்மாநில ஆட்சியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில், பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால் ஆகியோரை  திங்கட்கிழமை நேரில் சந்தித்து பேசினார் சச்சின் பைலட். இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்ற நிலையில், சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாட்டிற்குத் திரும்பியுள்ளனர். இந்நிலையில், ஜெய்ப்பூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், எம்எல்ஏக்கள் மனக்குமுறல் அடைவது இயல்புதான். பல வாரங்களாக ரிசார்ட்டில் தங்கும் நிலைமைக்கு அவர்கள் வந்துள்ளார்கள், என கூறியுள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், இப்போது நிலைமை சீரடைந்து உள்ளது. எனவே அவர்களை சந்தித்து நான் விளக்கம் கொடுத்துள்ளேன்.

மாநிலத்துக்கும், நாட்டுக்காகவும் பாடுபட வேண்டிய இடத்தில் இருக்கிறோம். எனவே இதுபோன்ற இடர்பாடுகளை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். இறுதியில் மக்கள் ஜனநாயகத்தை காப்பாற்றுவார்கள் என்று அவர்களுக்கு நான் உறுதி அளித்துள்ளேன். தவறுகளை நாம் மறக்க வேண்டியுள்ளது. ஜனநாயகத்திற்காக மறப்போம் மன்னிப்போம் என்ற கொள்கையை கையில் எடுக்க வேண்டியிருக்கிறது. ஜனநாயகம் தற்போது அபாய கட்டத்தில் இருக்கிறது. 100க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் எனது பக்கத்தில் இருக்கிறார்கள். இது மிகப்பெரிய வெற்றி. கர்நாடகா மற்றும் மத்திய பிரதேசத்தில் செய்த தந்திரங்களை ராஜஸ்தானில் பாஜக நடத்திக் காட்ட முயன்று தோல்வியுற்றுள்ளது. எங்கள் நண்பர்கள் மீண்டும் திரும்பி வந்துள்ளனர். நாங்கள் ஒன்றிணைந்து, எங்களுக்குள் இருந்த வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு மாநிலத்திற்காக பணியாற்றுவோம், என கூறியுள்ளார்.

Related Stories: