ஈரோட்டில் காவிரி ஆற்றில் சுத்திகரிக்கப்படாத சாயக் கழிவுகள் கலப்பு!: நள்ளிரவில் சாயப்பட்டறை ஆலைகள் அத்துமீறல்..!!

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வரும் சாயப்பட்டறைகளில் இருந்து நள்ளிரவில் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் திறந்துவிடப்படுவது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் சாய, சலவை, தோல் ஆலைகள் வாயிலாக தினமும் பல லட்சம் லிட்டர் கழிவு நீர் பல வண்ணங்களில், பொங்கும் நுரையுடன் நேரடியாக கழிவுநீர் கால்வாய்களிலும், குழாய்கள் மூலம் வாய்க்கால் காவிரி ஆற்றிலும் கலக்க விடப்படுவதால் பாசன  நிலங்களும், நிலத்தடி நீரும் மாசடைந்து புற்றுநோய் பாதிப்பு அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக சாயப்பட்டைகள் மூடப்பட்டதால் கழிவுகள் கலக்காமல் காவிரி ஆறு இயல்பான நிறத்துக்கு மாறி இருந்தது. இந்நிலையில், ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த சாயப்பட்டறைகள் தற்போது மீண்டும் இயங்கி வருகின்றன. இவற்றில் இருந்து வெளியேற்றப்படும் சாயக் கழிவுகள் நள்ளிரவு நேரத்தில் காவிரி ஆறு மற்றும் காலிங்கராயன் கால்வாயில் சுத்திகரிக்கப்படாமலேயே திறந்துவிடப்படுகிறது. இதனால் காவிரி நீர் மாசடைந்து நுரை பொங்கி காட்சியளிக்கிறது.

தொடர்ந்து, விதிமீறும் ஆலைகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே விதிமீறும் ஆலைகள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: