ஐபிஎல் டி20 தொடரின் டைட்டில் ஸ்பான்சராக பதஞ்சலி?

புதுடெல்லி: ஐபிஎல் போட்டியின் முக்கிய விளம்பரதாரராக இருந்த சீனாவின் விவோ செல்போன் நிறுவனம் நீக்கப்பட்டதை அடுத்து அந்த இடத்தில் ஆயுர்வேத நிறுவனமான பதஞ்சலி இடம் பெறும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கல்வான் பகுதியில் நடந்த மோதலை அடுத்து சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில், ஐபிஎல் தொடரின் முக்கிய விளம்பர நிறுவனமாக இருந்த விவோ ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து நீக்கப்பட்டது. இதனால் புதிய விளம்பர நிறுவனத்தை தேடும் பொறுப்பில் பிசிசிஐ உள்ளது. இது குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கூறுகையில், ‘விவோ நீக்கப்பட்டதால் நிதி நெருக்கடி ஏதும் இல்லை. சிறு தடங்கல் ஏற்பட்டுள்ளது.

அவ்வளவுதான். எங்களிடம் எப்போதும் அடுத்த திட்டம் தயாராக இருக்கும்’ என்று கூறியுள்ளார். புதிய விளம்பர நிறுவனம் இந்தியாவை சேர்ந்ததாக இருக்க வேண்டும் என்பதில் பிசிசிஐ முனைப்பு காட்டுகிறது. அதற்கு ஏற்ப  ஐபிஎல் போட்டியின் நடப்பு தொடருக்கு, டைட்டில் ஸ்பான்சர் உரிமத்தை பெற ஆயுர்வேத நிறுவனமான பதஞ்சலி திட்டமிட்டுள்ளது என்று  அதன்  செய்தி தொடர்பாளர் எஸ்.கே.டிஜரவாலா தெரிவித்துள்ளார். இந்த முடிவு மூலம் பதஞ்சலி பொருட்களுக்கு உலகளாவிய சந்தை கிடைக்கும் வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ள டிஜரவாலா, இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்று கூறியுள்ளார். 500 கோடி நஷ்டம்: செல்போன் நிறுவனமான விவோ 2018முதல் 2022ம் ஆண்டு வரை ஐபிஎல் போட்டியின் முக்கிய ஸ்பான்சராக ஒப்பந்தம் செய்திருந்தது. அதற்காக உரிமத் தொகை ரூ.2200 கோடியாகும். இனி புதிய நிறுவனம் முக்கிய விளம்பரதாரராக மாறினாலும் ரூ.500 கோடி வரை பிசிசிஐக்கு இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

Related Stories: