உணவு அருந்த முடியாத பெண் யானைக்கு தீவிர சிகிச்சை

தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர் அருகே உணவு அருந்த முடியாத 20 வயது மதிக்கத்தக்க பெண் யானைக்கு வனத்துறையினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கோவை மாவட்டம் போளுவம்பட்டி சரகத்திற்குட்பட்ட ஜாகிர் போரேத்தி என்ற மலைவாழ் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் வெள்ளிங்கிரி என்பவர் யானை பள்ளம் அருகே சிறுவாணி நீர் பிடிக்க நேற்று மாலை 3 மணி சென்றார். அப்போது அங்கு யானை சத்தம் கேட்டு அருகில் சென்று பார்த்தபோது உணவு அருந்த முடியாமல் உயிருக்கு போராடிய நிலையில் 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை கிடப்பதை பார்த்து வனத்துறை தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினரும், மருத்துவர்களும் பெண் யானைக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். யானையின் உடல்நிலையில் தற்போது வரை எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரயிலில் அடிபட்ட யானை கண்காணிப்பு:கோவை மதுக்கரை-பாலக்காடு ரயில்பாதை லைன் ‘பி’-யில் நேற்று முன்தினம் அதிகாலை சுமார் 5 வயது மதிக்கத்தக்க யானை நின்று கொண்டிருந்தது.அப்போது, கோவையில் இருந்து பாலக்காட்டிற்கு சென்ற சரக்கு ரயில் தண்டவாளத்தில் இருந்த யானையை உரசியதாக ரயில் ஓட்டுனருக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து  சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், மாவட்ட வனஅலுவலர் வெங்கடேஷ் உத்தரவின் பேரில் மதுக்கரை வனச்சரகர் சீனிவாசன் தலைமையிலான குழுவினர் அடிப்பட்ட யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது யானைக்கு காயம் ஏற்படவில்லை என கண்டறிந்தனர். இந்நிலையில், நேற்று 2வது நாளாக 6 பேர் கொண்ட குழுவினர் யானையை கண்காணித்தனர். யானை தனது கூட்டத்துடன் இருந்தது. இதனால், அருகில் சென்று பார்க்க முடியாமல் டிரோன் கேமிரா மூலம் கண்காணித்தனர்.

Related Stories: