குமரி மக்கள் வீடுகளில் முடங்கினர்: சாலைகளில் சுற்றியவர்களுக்கு போலீஸ் அறிவுரை

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் இன்று முழு ஊரடங்கு மற்றும் மழை காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கினர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஆகஸ்ட் மாதமும் ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஏற்கனவே கடந்த 2ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு  இருந்தது. இதன் தொடர்ச்சியாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) தளர்வுகள் இல்லாத ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி குமரி மாவட்டத்தில் கடைகள், பெட்ரோல் பங்க்குகள் அடைக்கப்பட்டு இருந்தன. மெடிக்கல் ஸ்டோர், ஆவின் பாலகங்கள் மட்டுமே திறந்து இருந்தன. இது 6 வது ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஊரடங்கு ஆகும்.

கடந்த வாரங்களை போல் போலீசார், ஊர்க்காவல் படையினர் என சுமார் 800 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முக்கிய சந்திப்புகளில் போலீசார் நின்று கண்காணித்தனர்.  வடசேரி, கோட்டார், மீனாட்சிபுரம் உள்ளிட்ட நகரின் மைய பகுதிகள் வெறிச்சோடி கிடந்தன.  கன்னியாகுமரி, தக்கலை, மார்த்தாண்டம், குளச்சல் உள்ளிட்ட பகுதிகளிலும் முழு ஊரடங்கு காரணமாக சாலைகள் வெறிச்சோடின. மேலும் நேற்று முதல் மாவட்டம் முழுவதும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இன்று காலையிலும் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது. இந்த மழை காரணமாகவும் மக்கள் வெளியே வர வில்லை. இருப்பினும் காலை வேளையில் ஒரு சிலர் பைக்குகளில் சுற்றி திரிந்தனர்.

அவர்களை பாதுகாப்பு பணிக்கு இருந்த போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். ஒரு சில இடங்களில் ஊரடங்கை மீறி  தெருக்களில் கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. பலசரக்கு கடைகள், கோழி இறைச்சி கடைகள் திறந்து இருந்தன. இது பற்றி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்ததன் பேரில் அதிகாரிகள் சென்று சோதனை நடத்தினர். இதே போல் நேற்று இரவு  வரையிலும் பல்வேறு இடங்களில் இறைச்சி கடைகளும், பலசரக்கு கடைகளும் திறந்து இருந்தன. மக்களும் நீண்ட வரிசையில் நின்றதை காண முடிந்தது. வழக்கமாக அந்தந்த காவல் நிலைய பகுதிகளில் மாலை 5 மணிக்கு பின், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு திறந்திருக்கும் கடைகளை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்வார்கள்.

மாநகராட்சி பணியாளர்களும் கண்காணிப்பார்கள். ஆனால் இப்போது இந்த கண்காணிப்புகள் இல்லை. ஊரடங்கு 138 வது நாளை எட்டி உள்ள நிலையில் குமரி மாவட்டத்தில் இதுவரை 8581 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 6343 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Related Stories: