துறைமுக கிடங்கில் 2,750 டன் அமோனியம் நைட்ரேட் வெடித்ததே காரணம் பெய்ரூட் குண்டுவெடிப்பு பலி 100 ஆனது: 4,000 பேர் படுகாயம்; வீடுகள் மீது உடல் பாகங்கள்

பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று முன்தினம் மாலை ஏற்பட்ட பயங்கர குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. 4,000க்கும் மேற்பட்டோர்காயம் அடைந்துள்ளனர். மத்திய கிழக்கு நாடான லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் துறைமுகம் உள்ளது. இங்குள்ள சேமிப்பு கிடங்கில் நேற்று முன்தினம் மாலை பயங்கர சத்தத்துடன், இரண்டு குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இதில் சேமிப்பு கிடங்கு, அதன் அருகில் இருந்த கட்டிடங்கள் தூள் தூளாகி தரைமட்டமாகின.  பெய்ரூட்டில் இருந்து 10 கி.மீ. தூரம் வரையிலான வீடுகள், கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்களின் ஜன்னல்கள் உடைந்து சிதறின. கிடங்கின் அருகே பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர்கள், சாலையில் சென்று கொண்டிருந்தவர்களில் பலர் ரத்த காயங்களுடன் வீதிகளில் தலை தெறிக்க ஓடினர். பெய்ரூட்டில் உள்ள மருத்துவமனைகள் கொரோனா பாதிப்பினால் நிரம்பி வழியும் நிலையில், ரத்த காயங்களுடன் வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

குண்டுவெடிப்பு காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால், பலர் தங்களுடைய குடும்பத்தினருடன் வீட்டை விட்டு வெளியேறி வேறு பாதுகாப்பான இடங்களுக்கு செல்லத் தொடங்கி உள்ளனர். குண்டுவெடிப்பை நேரில் பார்த்த மார் மிகாயில் கூறுகையில், ``குண்டுவெடிப்பில் தூக்கியெறிப்பட்ட பலரின் உடல் பாகங்கள் தெருக்களிலும், வீடுகளின் மாடிகளிலும், மேற்கூரைகளிலும் சிதறி கிடந்தன,’’ என்றார். குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து அங்கு விரைந்த செஞ்சிலுவை சங்கத்தினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வருகின்றனர். இது குறித்து லெபனான் செஞ்சிலுவை சங்கத்தின் அதிகாரி ஜார்ஜ் கேட்டனி கூறுகையில், ``லெபனான் சுகாதாரத் துறையுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். மருத்துவமனைகள் நோயாளிகள் வருகையால் நிரம்பி உள்ளதால், சடலமாக மீட்டவர்களை உறவினர்களால் அடையாளம் காண தற்காலிக பிணவறையில் வைத்திருக்கிறோம்,’’ என்று கூறினார்.

இறக்குமதியை நம்பி வாழ்க்கை நடத்தும் 50 சதவீத மக்கள் இதனால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே, பொருளாதார வீழ்ச்சி, ஊழல், திறமையற்ற நிர்வாகம், கொரோனா வைரஸ் தாக்குதல் என திணறி வரும் நிலையில், இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தங்களது வாழ்க்கையை புரட்டி போட்டு விட்டதாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் புலம்பி வருகின்றனர். இந்த சம்பவம் இந்நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக பேசிய லெபனான் அதிபர் ஜோசப் அவுன், ``100க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

4,000க்கு மேலானோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால், அவசரநிலை பிரகடனப் படுத்தப்படுகிறது. நாடு முழுவதும் 3 நாள் துக்க தினம் அனுசரிக்கப்படும். அவரச நிதி உதவிக்காக ₹495 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது’’ என்று கூறினார். இந்த குண்டு வெடிப்பு குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பிரதமர் ஹசன் தியாப், ``துறைமுக சேமிப்பு கிடங்கில் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக அப்புறப்படுத்தப்படாமல் வைத்திருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட் ரசாயனமே குண்டு வெடிப்புக்கு காரணம், என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்’’ என்று

தெரிவித்தார்.

* பெய்ரூட் துறைமுகத்தில் நடந்த வெடிவிபத்தின் அதிர்வு, 3.3 ரிக்டர் அளவுகோலில் பதிவான நிலநடுக்கத்தை போன்று இருந்ததாக நில அதிர்வு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

* வெடிமருந்து வெடித்ததால் ஏற்பட்ட நிலஅதிர்வு 240 கி.மீ. தொலைவில் உள்ள தீவு நாடான சைப்ரஸ் வரை உணரப்பட்டது.

* இது, 1975-1990 வரையில் கால கட்டத்தில் அண்டை நாடான இஸ்‌ரேலுடன் நடக்கும் போரின் போது நடத்தப்படும்  வெடிகுண்டு தாக்குதல் போல் இருந்ததாக மக்கள் கூறினர்.

காயமடைந்த பொதுமக்கள் ரத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

* வெடிவிபத்து அல்ல வெடிகுண்டு தாக்குதல்: டிரம்ப் சந்தேகம்

பெய்ரூட் வெடி விபத்து தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில், ``பெய்ரூட்டில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக பாதுகாப்பு துறை உயர் அதிகாரிகளிடம் பேசினேன். அவர்கள் இது குண்டுவெடிப்பு சம்பவமாக தோன்றவில்லை. வெடிகுண்டு தாக்குதலாக இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கின்றனர். இதை அமெரிக்கா உன்னிப்பாக கண்காணித்து வருகிறது,’’ என்றார்.

* குவியும் உலக நாடுகள் உதவி

பிரதமர் ஹசன் தியாப்பின் கோரிக்கையை தொடர்ந்து, பிரான்ஸ், ரஷ்யா, ஈரான் உள்ளிட்ட உலக நாடுகள் லெபனானுக்கு உதவ முன்வந்துள்ளன. ரஷ்ய பேரிடர் துறை அமைச்சகம், மீட்பு படையினர், மருத்துவ பணியாளர்கள், நடமாடும் கொரோனா மருத்துவமனை மற்றும் ஆய்வகங்கள் அமைக்க 5 விமானங்களில் பணியாளர்களை அனுப்பி வைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. பிரான்ஸ் அதிபர் மேக்ரான் இமானுவேல், 15 டன் மருந்துகள், 500 பேருக்கு சிகிச்சை அளிக்க தேவையான பணியாளர்கள், நடமாடும் ஊர்தி மருத்துவமனைகள் ஆகியவற்றை 2 விமானங்களில் அனுப்பி வைக்க இருப்பதாக தெரிவித்தார். ஜோர்டான் ராணுவ மருத்துவர்களையும், எகிப்து காயமடைந்தவர்களுக்கு உதவும் மருத்துவமனைகளையும் செக் குடியரசு 37 மீட்பு குழுக்களையும், இடிபாடுகளில் சிக்கியவர்களை தேடி கண்டுபிடிக்க மோப்ப நாய்களையும், டென்மார்க, கிரீஸ் ஆகிய நாடுகள் மீட்பு படையினரையும் அனுப்பி உள்ளன.

* பிரதமர் மோடி இரங்கல்

லெபனான் குண்டுவெடிப்பு பற்றி உலக தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு:

நரேந்திர மோடி (இந்தியா): பெய்ரூட்டில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பு பற்றி கேள்வியுற்று அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். பலியானவர்கள், காயமடைந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதலும், பிரார்த்தனையும் தெரிவித்து கொள்கிறேன். டொனால்டு டிரம்ப் (அமெரிக்கா): லெபனான் குண்டுவெடிப்பை அமெரிக்கா உன்னிப்பாக கவனிக்கிறது. இறந்தவர்களின் குடும்பத்தினருக்காக பிரார்த்தி கொள்கிறேன். அன்டோனியோ கட்டரெஸ் (ஐநா): பலியானவர்களின் குடும்பத்தினருக்கும், லெபனான் அரசுக்கும், பொதுமக்களுக்கும் இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். இந்த இக்கட்டான தருணத்தில் லெபனானுக்கு ஐநா ஆதரவு அளிக்கிறது. இச்சம்பவத்தின் தற்போது உதவி அளித்து வருகிறது.

56. இலங்கையில் 70 சதவீத  வாக்குப்பதிவு

கொழும்பு: இலங்கையில் நேற்று நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 70 சதவீத வாக்குகள் பதிவானது. இலங்கையில் கடந்த மார்ச் 2ம் தேதி நாடாளுமன்றத்தை கலைத்து, புதிதாக தேர்தல் நடத்த அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டார். ஆனால், கொரோனா தொற்று காரணமாக 2 முறை ஒத்திவைக்கப்பட்ட தேர்தல், நேற்று நடந்தது. மக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் நின்று வாக்களித்தனர். மாலை, 5 மணி நிலவரப்படி, 70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கை இன்று காலை நடக்கிறது. இத்தேர்தலில் ராஜபக்சே கட்சிக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக கருத்து கணிப்புகள் கூறுகின்றன.

20 கட்சிகள்; 7,200 வேட்பாளர்கள்

* இலங்கை நாடாளுமன்றத்தின் மொத்த எம்பி.க்கள் எண்ணிக்கை 225.

* ஆனால், இத்தேர்தல் மூலம் 196 எம்பி.க்களை மட்டுமே மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுப்பார்கள்.

* எம்பி.க்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்.

* மற்ற 26 எம்பி.க்கள், கட்சிகள் பெறும் வாக்குகளின் சதவீதம் அடிப்படையில் நியமன எம்பி.க்களாக நியமிக்கப்படுவார்கள்.

* 1.6 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

* வாக்குப்பதிவுக்காக நாடு முழுவதும் 12,985 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

* மொத்தம் 20 கட்சிகளை சேர்ந்த, 7200 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர்.

Related Stories: