பழவேற்காடு மீன் சந்தையில் சமூக இடைவெளியின்றி குவிந்த மீனவர்கள்: கொரோனா பரவும் அபாயம்

பொன்னேரி: பழவேற்காடு மீன் ஏல சந்தையில் சமூக இடைவெளி கடைபிடிக்காமல் கூட்டம் கூட்டமாக மீனவர்கள் குவிந்து வருதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பழவேற்காடு ஏரியிலும், கடலிலும் மீன், இறால் ஆகியவற்றை பிடித்துவிட்டு வரும் மீனவர்கள் அதனை மீன் ஏல சந்தைக்கு கொண்டு வந்து விற்பது வழக்கம். இந்த மீன் ஏல சந்தையில் சில்லரை விற்பனை செய்யும் மீன் வியாபாரிகளும், பொதுமக்களும் வந்து மீன்களை வாங்கி செல்வது வழக்கம். முழு ஊரடங்கு உத்தரவால் சனிக்கிழமைகளில் மட்டுமே மீன் சந்தைகளில் கூட்டம் அலை மோதி வந்தது.

இந்நிலையில், வழக்கத்துக்கு மாறாக நேற்று பழவேற்காடு மீன் சந்தையில் சில்லரை வியாபாரிகள் ஏராளமானோர் கூட்டம் கூட்டமாக ஒன்று திரண்டு மீன் வாங்க குவிந்தனர். மேலும், அவர்கள் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படாமலும், முகக்கவசங்கள் அணியாமலும் திரண்டதால் அங்கு கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டது. ஏற்கனவே, திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் பழவேற்காடு மீன் சந்தை கொரோனா பரப்பும் மையமாக மாறிவிடும் அபாயம் உள்ளது. எனவே பழவேற்காடு மீன் சந்தையை அதிகாரிகள் முறையாக கண்காணித்து கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: