மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை சமஸ்கிருதத்தை திணிக்கிறது; அதனை ஏற்க முடியாது!: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி..!!

புதுச்சேரி: மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை சமஸ்கிருதத்தை திணிக்கிறது என்றும் அதனை ஏற்க முடியாது என்றும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதிய கல்விக் கொள்கையை பொறுத்தவரையில் மதத்தின் சாயல் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் சமஸ்கிருத மொழி இந்த கல்விக் கொள்கையில் திணிக்கப்படுகிறது. இந்திய நாடு ஒரு மதச்சார்பற்ற நாடு. அனைத்து மக்களையும் அரவணைத்து செல்கின்ற நாடு. இந்துக்கள், கிருஸ்துவர்கள், முஸ்லீம்கள், சீக்கியர்கள் என யாவராக இருந்தாலும் எல்லோரையும் சமமாக பாவிக்கின்ற ஒரு மாநிலமாக புதுச்சேரி மாநிலம் உள்ளது.

இந்த நாடும் அவ்வகையிலேயே இருக்கின்றது. இந்த சூழ்நிலையில் ஒரு மதத்தை மட்டும் திணிக்கின்ற வகையில் இந்த புதிய கல்விக் கொள்கை இருப்பதால் அதனை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தப் புதிய கல்விக் கொள்கை பல குழப்பங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்துகிறது. பல மாற்றங்களைக் கொண்டு வருகிறோம் என்று சொல்கின்றனர். ஆனால், வேத பாடசாலை திட்டத்தை கொண்டு வருகின்றனர். குலக் கல்வியைக் கொண்டு வர விரும்புகின்றனர். கட்டாய மொழியாக மும்மொழி திட்டம் வேண்டும் என்று கூறுகின்றனர். அதுமட்டுமின்றி புதிய கல்விக் கொள்கையானது வேலையை நோக்கி செல்கிறது என்று சொல்கின்றனர். ஆனால் அதனை முழுமையாகப் படித்துப் பார்க்கும்போது மக்களுக்குப் பயன்படுகின்ற திட்டத்தை கொடுக்காததாக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: