முழு ஊரடங்கு காரணமாக ஆடிப்பெருக்கில் களையிழந்த கொடிவேரி அணை

கோபி:ஆடிப்பெருக்கு அன்று ஏராளமானோர் குவியும் கொடிவேரி அணை முழு ஊரடங்கு காரணமாக நேற்று களையிழந்து வெறிச்சோடி காணப்பட்டது.   ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளமான கொடிவேரி அணை 700 ஆண்டுக்கு முன் கட்டப்பட்டது. இந்த அணையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் அருவி போல் கொட்டுவதாலும், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பாக குளிக்க முடியும் என்பதால், ஈரோடு மாவட்டத்தில் இருந்து மட்டுமின்றி கோவை, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசு விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வருவது வழக்கம்.

இதில் குறிப்பாக ஆடி 18ம் நாளில் ஏராளமான பொதுமக்கள் அணைக்கு வந்து சாமி தரிசனம் செய்து, கிடாய் விருந்து வைத்தும், முன்னோர்களுக்கு தர்ப்பனம் செய்தும், புதுமண தம்பதியர் தாலி மாற்றுவது வழக்கம். இந்நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கொடிவேரி அணை மூடப்பட்டது. இந்நிலையில் ஆடிப்பெருக்கு நாளான நேற்று தளர்வு இல்லா ஊரடங்கு அமலில் இருந்ததால், கொடிவேரி அணைக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டது.

இதனால் பல ஆண்டுகளாக கோலாகலமாக களைகட்டி வந்த கொடிவேரி அணை நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. அணை பகுதிக்கு வருபவர்களை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். தடையை மீறி  இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Related Stories: