மின்னல் தாக்குதலையும் கணிக்க முயற்சி வானிலை முன்னறிவிப்புக்கும் செயற்கை நுண்ணறிவு நுட்பம்: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

புதுடெல்லி: வானிலை முன்னறிவிப்பிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டமிட்டு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்றைய நவீன உலகில் அறிவியல், தொழில்நுட்பம், ராணுவம், மருத்துவம், பாதுகாப்பு என்று பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தொழில்நுட்பத்தை வானிலை முன்னறிவிப்புக்கும் பயன்படுத்த இந்திய வானிலை ஆய்வு மையம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம், 3 முதல் ஆறு மணி நேரம் வரையிலான தீவிர வானிலை முன்னறிவிப்பினை மேம்படுத்த அது  திட்டமிட்டுள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் ஜெனரல் மிருதுஞ்சய் மொகாபத்ரா நேற்று கூறியதாவது:

வானிலை முன்னறிவிப்பை மேம்படுத்துவதற்கு செயற்கை நுண்ணறிவு எவ்வாறெல்லாம் பயன்படுத்தலாம் என்பது குறித்து ஆய்வு செய்யும் ஆராய்ச்சி குழுக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். இது தொடர்பான ஆராய்ச்சி குழுக்களின் திட்டங்களை  புவி அறிவியல் அமைச்சகம் மதிப்பீடு செய்து வருகிறது. மேலும், பல்வேறு நிறுவனங்களுடனும் இணைந்து ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டு இருக்கிறது. அடுத்த 3 முதல் 6 மணி நேரம் வரையில் நிகழும் தீவிர வானிலை நிகழ்வுகள் பற்றிய முன்னறிவிப்பை ரேடார்கள், செயற்கைக்கோள் படங்கள் போன்ற பல்வேறு கருவிகளின் உதவியுடன் கணித்து தற்போது வெளியிடப்படுகிறது.

மழை, புழுதிப்புயல் போன்ற தீவிர வானிலை முன்னறிவிப்புகளையும் வெளியிடுகிறோம். ஆனால், இடியுடன் கூடிய மழை, மின்னல், புயல், கனமழை போன்றவற்றை கணிப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. ஏனெனில், தீவிர வானிலை நிகழ்வுகள் மிகக் குறுகிய நேரத்தில் வேகமெடுத்து மின்னலாகவோ, கனமழையாகவோ உருவெடுக்கின்றன. கடந்த மாதம் உத்தர பிரதேசம், பீகாரில் மின்னல் தாக்கி மட்டும் 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை இதற்கு உதாரணமாக கூறலாம்.

ஆனால், செயற்கை நுண்ணறிவு கடந்த கால வானிலை நிகழ்வுகளில் இருந்து பெறும் அனுபவங்களை கொண்டு, அதனை மேம்படுத்தி கணினிகளுக்கு வழங்குவதால் தற்போதைய வானிலை நிகழ்வுகள் குறித்து உடனடியாக முடிவு எடுக்க முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார். ‘‘மழை, சூறாவளி, புழுதிப்புயல் போன்ற தீவிர வானிலை  முன்னறிவிப்புகளையும் வெளியிடுகிறோம். ஆனால், திடீரென ஏற்படும் இடியுடன் கூடிய மழை, மின்னல், கனமழை போன்றவற்றை கணிப்பது மிகவும் கடினமாக இருக்கிறது,’’

Related Stories: