தாவரவியல் பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் கள்ளிச் செடிகள் அலங்காரம்

ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் கள்ளிச் செடிகளை கொண்டு தனி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் பல்வேறு வகையான தாவரங்கள், மூலிகைகள், பூக்கும் மற்றும் பூக்காத செடிகள், வெளி நாடுகளில் காணப்படும் பல்வேறு வகையான மரங்கள்,கல் மரம் மற்றும் கள்ளிச் செடிகள் வைக்கப்பட்டுள்ளன. இதனை காண நாள் தோறும் சுற்றுலா பயணிகள் வந்துச் செல்வது வழக்கம். இந்நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளதால், தற்போது பூங்கா மூடப்பட்டுள்ளது.

அதேசமயம், பூங்காவில் வழக்கமான பராமரிப்பு பணிகள் மற்றும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தாவரவியல் பூங்காவில் உள்ள பெரிய கண்ணாடி மாளிகையில் இதுவரை பல்வேறு வகையான மலர் செடிகள் மட்டுமே அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் அங்காங்கே ஓரிரு கள்ளிச் செடிகள் வைக்கப்பட்டிருக்கும். ஆனால், தற்போது பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் கள்ளிச் செடிகளுக்கு என ஒரு பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு சுமார் 20க்கும் மேற்பட்ட வகைகளை கொண்ட கள்ளிச் செடிகள் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளன.  அரிதான இந்த கள்ளிச் செடிகள் பார்ப்பதற்கு மிக அழகாக உள்ளன.

நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால் பெரும்பாலான மக்கள் கள்ளிச் செடிகளை பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், தற்போது பூங்கா கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட்டுள்ள பல வகையான கள்ளிச் செடிகளை பார்த்து ரசிக்க வாய்ப்புள்ளது. சுற்றுலா பயணிகள் ஊட்டி வர அனுமதிக்கப்பட்டவுடன் இந்த கள்ளிச் செடிகளின் அழகை காண முடியும்.

Related Stories: