19 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக காங்கிரஸ் கொறடா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

புதுடெல்லி: சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்கள் மீது நடவடிகக்கை எடுக்க ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக காங்கிரஸ் கொறடா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக, துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட், தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேருடன் சேர்ந்து ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாகவும், கட்சியின் எம்எல்ஏ.க்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் கொறடா உத்தரவை மீறியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. காங்கிரஸ் அளித்த புகாரின் பேரில், கட்சித் தாவல் தடை சட்டத்தின்படி இவர்களின் பதவியை பறிப்பது தொடர்பாக கடந்த வாரம் சபாநாயகர் சி.பி.ஜோஷி நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டீசுக்கு எதிராக பைலட் உட்பட 19 எம்எல்ஏ.க்களும், ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அதை விசாரித்த நீதிமன்றம், பைலட் உட்பட 19 பேரின் மீதும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று சபாநாயகருக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ராஜஸ்தான் சட்டசபை காங்கிரஸ் கட்சியின் தலைமை கொறடா மகேஷ் ஜோஷி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். தலைமை கொறடா மகேஷ் ஜோஷி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விரைவில் விசாரிக்க உள்ளது. ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி ராஜஸ்தான் சட்டசபை கூடுகிறது. அப்போது சச்சின் பைலட் உள்பட 19 எம்.எல்.ஏ.க்களால் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்ற ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சி நினைக்கிறது. இதனால் அவர்களை தகுதி நீக்கம் செய்து விட்டால் பிரச்சினை சரியாகிவிடும் என்று நினைக்கும் காங்கிரஸ் கட்சி அதற்கான வேலைகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: