இந்தியாவில் சர்வதேச பயணிகள் விமான சேவைளுக்கு ஆக. 31 வரை அனுமதியில்லை: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் ஆக. 31 வரை சர்வதேச பயணிகள் விமானங்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்காக பல நாடுகள் பொது முடக்கத்தை அமல்படுத்தியுள்ளன. இதனால் சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி சர்வதேச விமான போக்குவரத்து மற்றும் உள்நாட்டு விமான போக்குவரத்தை தடை செய்தது. அதன்பின் மே 25ம் தேதி பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகைகள் பின்பற்றி உள்நாட்டு பயணிகள் விமான சேவை மட்டும் தொடங்கியது. எனினும், ஒரு சில விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் மட்டுமே உள்நாட்டில் சேவை செய்து வருகின்றன. இதற்காக பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. எனினும், சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு எப்போது அனுமதியளிக்கப்படும் என்பது மக்களின் கேள்வியாக உள்ளது.

ஒவ்வொரு முறையும் மத்திய அரசு ஊரடங்கை நீட்டிக்கும்போது  விமான போக்குவரத்துக்கான தடையும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி வரை சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்துக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. ஆனால் வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்கான விமானங்கள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி வரை நாடு முழுவதும் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.  அதேபோல் மூன்றாம் கட்ட தளர்வுகள் நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டிருந்தாலும் அந்தந்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் கரோனா பாதிப்பு நிலவரத்தை வைத்து, கட்டுப்பாடுகளைத் தீர்மானித்துக்கொள்ளலாம் எனவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: