மதுரையில் இ-பாஸ் பெற்று தருவதாக மோசடியில் ஈடுபடும் ட்ராவல்ஸ் நிறுவனங்கள்...!! உரிய நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை!!!

மதுரை:  மதுரையில் இ-பாஸ் பெற்றுத்தருவதாக மோசடியில் ஈடுபடும் ட்ராவல்ஸ் நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றானது நாளுக்கு நாள் புதிய உச்சம் பெற்று வருகிறது. தற்போது சென்னையில் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டாலும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோனா தொற்றானது அதிகளவில் பரவி வருகிறது.

இதனால் தமிழக அரசானது ஆகஸ்ட் 31ம் தேதி வரை பொதுமுடக்கத்தை நீடித்து அறிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்ற நடைமுறை தொடர்கிறது. இந்த நிலையில் சிலர் அவரச தேவைகளுக்காக இ-பாஸ் விண்ணப்பிக்கும்பொழுது அவை நிராகரிக்கப்படுகின்றனர். அதனை பயன்படுத்தி சில நிறுவனங்கள் இ-பாஸ் பெற்று வருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை அறியாமல் பலரும் அதில் பணத்தை பறிகொடுத்து வருகின்றனர். அதாவது மதுரையில் உள்ள சில ட்ராவல்ஸ் நிறுவனங்கள் எந்த காரணமும் இன்றி இ-பாஸ் பெற்று சென்னை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அழைத்து செல்லும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து, மதுரையிலிருந்து சென்னை செல்ல 2 ஆயிரம் ரூபாயும், கோவைக்கு ஆயிரத்து 500 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. இந்த மோசடியானது ட்ராவல்ஸ் நிறுவனங்களில் மட்டுமின்றி சாதாரண மளிகை கடைகளிலும் இ-பாஸ் பெற்று தருவதாக மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது மளிகை கடையில் ஆதார் நகலும், 4 ஆயிரம் பணமும் கொடுத்தால் இ-பாஸ் தமிழகத்தில் உள்ள எந்த மாவட்டங்களுக்கு வேண்டுமானாலும் செல்வதற்கு அனுமதி பெற்றுத்தருவதாக ஆசை காட்டி பண மோசடியானது நடந்து வருகிறது. இவை மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் மாவட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: