உத்தரவிட்ட பிறகும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மாநில அரசுகள் உதவவில்லை..: உச்சநீதிமன்றம் கண்டனம்..!

புதுடெல்லி: புலம்பெயர் தொழிலாளர்கள் வழக்கில் நீதிமன்ற ஆணையை செயல்படுத்தவில்லை என்று மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக சொந்த மாநிலங்களுக்கு திரும்ப முடியாமல் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். தொழிலாளர்கள் பலர் நடந்தே சொந்த ஊர்களுக்கு திரும்ப முயன்றனர். இந்நிலையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பான விவகாரத்தை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு முன்னதாக விசாரணைக்கு வந்தபோது, புலம் பெயர் தொழிலாளர்களை அவர்களுடைய சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்குமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளை நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

மேலும், அவர்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளை மாநில, யூனியன் பிரதேச மற்றும் மத்திய அரசுகள் திரும்ப பெற பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. மேலும், புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்த ஒரு பட்டியலை தயாரித்து அவர்களுக்கான வேலை வாய்ப்புகள் குறித்த திட்டங்களை தயாரிக்க வேண்டும் என்று மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் வழிகாட்டியது. இந்நிலையில், இந்த வழக்கானது இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உத்தரவிட்ட பிறகும் தொழிலாளர்களுக்கு மாநில அரசுகள் உதவவில்லை என்று உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், புகார்கள் மீதான நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை அளிக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் 3 வார கால அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Related Stories: