ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிராக தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்: குழந்தைகள், பெற்றோர் உரிமைகள் பறிக்கப்படுவதாக புகார்

புதுடெல்லி: பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதை எதிர்த்து தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளதால் தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மாணவர்கள் படித்தார்களா, புரிந்ததா என்பது பற்றி கவலையின்றி கட்டணம் வசூலிக்க ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. அதே நேரத்தில் இந்த ஆன்லைன் வகுப்புகளில் வசதி இல்லாத மாணவர்கள் பங்கேற்க முடியாத நிலை உள்ளது. மாணவர்கள் வீட்டில் ஸ்மார்ட் போன், கம்ப்யூட்டர் இல்லாததால் அவர்களால் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியவில்லை.

ஸ்மார்ட்போன் வாங்க முடியாததால் தாழ்வு மனப்பான்மை காரணமாக மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொள்வது தொடர்கிறது. இந்த நிலையில் ஆன்லைன் கல்வி திட்டத்திற்கு எதிராக தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் பெற்றோர் உரிமைகள் பறிக்கப்படுவதாகவும், ஆன்லைன் கல்வியால் அவர்கள் மன நலம், உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட தேசிய மனித உரிமை ஆணையம், இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. இதற்கிடையில், ஆன்லைன் வகுப்பை கவனிக்க பெற்றோர் செல்போன் வாங்கி தராததால் பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவர் ஒருவர் கடலூர் அருகே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர், ஆன்லைன் வகுப்பை கவனிக்க செல்போன் வாங்கித் தருமாறு தனது பெற்றோரிடம் கேட்டுள்ளார் ஆனால் செல்போன் வாங்கித் தரும் அளவிற்கு தங்களிடம் பணம் இல்லை என பெற்றோர்கள் கூறியதாவது கூறியதாக தெரிகிறது. இதனால் மன விரக்தி அடைந்த அந்த மாணவர் செல்போன் இல்லாமல் ஆன்லைன் வகுப்புகளை கவனிக்க முடியாதது குறித்து கவலை அடைந்துள்ளார். இந்த நிலையில் பெற்றோர் செல்போன் வாங்கி தராத விரக்தியில் திடீரென தூக்கில் தொங்கி அந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Related Stories: