அரசு விதித்த கெடுவுக்கு முன் டெல்லி பங்களாவை காலி செய்தார் பிரியங்கா காந்தி: வாடகை வீட்டில் குடியேறுகிறார்

புதுடெல்லி: டெல்லியில் தான் வசித்து வரும் அரசு பங்களாவை மத்திய அரசு விதித்த கெடுவுக்கு முன்பாகவே, பிரியங்கா காந்தி நேற்று காலி செய்தார். மத்திய அரசின் நடவடிக்கைகளையும், பிரதமர் மோடியையும் காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் இக்கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதே நேரம், இவர்களுக்கு எதிராக பாஜ தலைவர்களும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். கடந்தாண்டு இவர்கள் 3 பேருக்கும் அளித்து வந்த தேசிய பாதுகாப்பு படை பாதுகாப்பை மத்திய அரசு வாபஸ் பெற்றது. இதனால், அரசின் பல்வேறு சலுகைகள் இவர்களுக்கு ரத்து செய்யப்பட்டு வருகிறது.

டெல்லியில் லோதி எஸ்டேட் பகுதியில் உள்ள அரசு பங்களாவில் பிரியங்கா காந்தி தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இதை ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் காலி செய்து ஒப்படைக்கும்படி கடந்த 1ம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்கு, பல்வேறு கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், அரசு விதித்த கெடுவுக்கு 2 நாட்கள் முன்பாகவே, பிரியங்கா நேற்று தான் வசித்து வந்த அரசு பங்களாவை காலி செய்தார். அவர் பயன்படுத்தி பொருட்கள், லாரிகளில் ஏற்றிச் செல்லப்பட்டன.

பங்களா நல்ல நிலையில் ஒப்படைக்கப்பட்டதற்கான கடிதத்தை, மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறையிடம் அவர் அளித்தார். மேலும், இந்த பங்களாவுக்கான மின்சாரம், தண்ணீர், வீட்டு வரி உள்ளிட்ட அனைத்து கட்டண பாக்கிகளையும் செலுத்தினார். இந்நிலையில், டெல்லியில் வாடகை வீட்டில் பிரியங்கா குடியேற உள்ளார். இதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள வீட்டில், சில வசதிகளை ஏற்படுத்துவதற்கான வேலைகள் நடக்கின்றன. அதுவரையில், குர்கானில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அவர் வசிக்க இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

* லக்னோ செல்லவில்லை

அரசு பங்களாவை காலி செய்த பிரியங்கா, லக்னோவில் குடியேறப் போவதாக அறிவிக்கப்பட்டது. அதற்காக, அங்கு அவருடைய அத்தை வீடும் தயார் செய்யப்பட்டது. ஆனால், அவர் டெல்லியில் வாடகை வீட்டில் வசிக்கப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Related Stories: