சமஸ்கிருத திணிப்பு: ஏழை மாணவர்களுக்கு உயர் கல்வியை எட்டாக்கனியாக்கும் முயற்சி...புதிய கல்விக் கொள்கைக்கு திமுக எம்.பி கனிமொழி எதிர்ப்பு

புதுடெல்லி: புதிய கல்விக் கொள்கை -2020’ க்கு  திமுக எம்.பி கனிமொழி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த 1986ல் உருவாக்கப்பட்ட, ‘தேசியக் கல்விக் கொள்கை,’ கடந்த 1992ம் ஆண்டு மாற்றி அமைக்கப்பட்டது. பின்னர், இந்த கொள்கையை மீண்டும் மாற்றி அமைப்பதற்காக ‘புதிய கல்விக் கொள்கை’ வகுக்கப்படும் என, கடந்த 2014 மக்களவை தேர்தலின் போது பாஜ தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது. அதன்படி, தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்ததும், இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரிரங்கன் தலைமையில் புதிய கல்விக் கொள்கையை உருவாக்கும் குழுவை அமைத்தது. இக்குழு பல்வேறு ஆய்வுகளை செய்து, கடந்த 2019ம் ஆண்டு மத்திய அரசிடம் தனது அறிக்கையை தாக்கல் செய்தது.

இதில் உள்ள பல்வேறு அம்சங்களுக்கு அப்போதே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், இது கிடப்பில் போடப்பட்டு இருந்தது. கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி, கிடப்பில் உள்ள பல்வேறு திட்டங்கள், சட்டங்களை ஓசைப்படாமல் மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. அந்த வரிசையில், பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ‘புதிய கல்விக் கொள்கை -2020’ க்கு திடீரென ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், புதிய கல்விக் கொள்கை குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, 34 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றம் கொண்டுவரப் பட்டிருக்கும் தேசிய கல்விக் கொள்கையில் ஆக்கப்பூர்வமான எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார். குறிப்பாக, அனைத்து உயர்கல்வி படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு, மும்மொழிக் கொள்கை, சமஸ்கிருதத்துக்கு முக்கியத்துவம் போன்றவை கல்வித்தரத்தை மேம்படுத்தும் அறிவிப்புகளா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

புதிய தேசிய கல்விக் கொள்கையின் மூலம் ஏழை, எளிய மாணவர்களுக்கு உயர் கல்வியை எட்டாக்கனியாக்கும் முயற்சி நடக்கிறது. மாநில உரிமைகள் பறிப்பு, இந்தி திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு ஆகியவற்றை திட்டமிட்டு செய்து வருகிறது மத்திய பாஜக அரசு. இதை தமிழக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories: